தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் மறைக்கல்வியுரை 150120 திருத்தந்தையின் மறைக்கல்வியுரை 150120  (Vatican Media)

மறைக்கல்வியுரை: புனித பவுலின் நற்செய்தி அறிவிப்பு பயணங்கள்

புனித லூக்கா தன் நூலில் எடுத்துரைக்கும் நற்செய்தி அறிவிப்புப்பணிகள் பெரும்பாலும் புனித பவுலின் பயணங்களைப் பற்றியே அமைந்துள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கடந்த பல வாரங்களாக திருத்தூதர் பணிகள் நூலில் காணப்படும், சீடர்களின் மறைப்பணி குறித்து மறைக்கல்வி உரைகளை வழங்கி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், புனித திருத்தந்தை 6ம் பவுல் அரங்கில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, இத்தொடரின் இறுதிப் பகுதியை வழங்கினார். புனித பவுல் உரோம் நகர் வந்தடைந்து, அங்கு இரண்டு ஆண்டுகள் ஆற்றிய மறைப்பணி பற்றியதாக அது இருந்தது. முதலில் திருத்தூதர் பணிகள் நூலின் 28ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட, திருத்தந்தையும் தன் உரையைத் துவக்கினார்.

உரோமைக்கு வந்தபோது பவுல் தனி வீட்டில் தங்கியிருக்க அனுமதி பெற்றுக் கொண்டார். ஆனால், படைவீரர் ஒருவர் அவரைக் காவல் காத்து வந்தார். […] பவுல் அங்கு இரண்டு ஆண்டுகள் முழுவதும் தாம் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்தார். தம்மிடம் வந்த அனைவரையும் வரவேற்று, இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி முழுத் துணிவோடு தடையேதுமின்றிக் கற்பித்துக் கொண்டிருந்தார் (தி.ப.28, 16.30-31).

அன்பு சகோதரர் சகோதரிகளே,

தன் வழக்கை சீசர் முன் எடுத்துரைக்க, விலங்குகள் பூட்டப்பட்டவராக உரோம் நகருக்கு வந்த புனித பவுல் குறித்து எடுத்துரைக்கும் இன்றைய மறைக்கல்வி உரையுடன், திருத்தூதர் பணிகள் குறித்த தொடரை நாம் நிறைவுசெய்கிறோம். நாம் ஏற்கனவே பார்த்துள்ளதுபோல், புனித லூக்கா தன் நூலில் எடுத்துரைக்கும் நற்செய்தி அறிவிப்புப்பணிகள் பெரும்பாலும் புனித பவுலின் பயணங்களைப் பற்றியே அமைந்துள்ளன. உரோம் நகரில் கிறிஸ்தவ சமுதாயத்தால் வரவேற்கப்பட்ட புனித பவுல், அங்கு வீட்டுக்காவலுடன் தங்க அனுமதிக்கப்பட்டார். புனித பவுலின் மறைசாட்சிய மரணத்தைப்பற்றியல்ல, மாறாக, விலங்கிடப்பட முடியாத இறைவனின் வார்த்தைகளின் (2 திமொ. 2:9) வல்லமையை எடுத்துரைக்கும் விதமாக, புனித பவுல் சோர்வின்றி நற்செய்தி அறிவிப்புப்பணியில் ஈடுபட்டதைக் குறித்து எடுத்துரைத்து, தன் நூலை நிறைவு செய்கின்றார் புனித லூக்கா. உரோம் நகரில் தன் உச்சத்தை எட்டி முடிவுற்ற புனித  பவுலின் மறைப்பணி பயணங்கள், நற்செய்தியின் மீட்பளிக்கும் செய்தியைக் குறித்து நம் இதயங்களைத் திறக்கும் இறை அருளின் வல்லமை பற்றி வெளிப்படுத்துகின்றன. உலகம் முழுவதும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது குறித்து கடந்த சில மாதங்களாக மறைக்கல்வி உரைகளில் கேட்டுவந்த நாம், இயேசுவின் மகிழ்ச்சி நிறை மறைப்பணி சீடர்களாக, மனஉறுதியுடன் செயல்படுவதற்குரிய அழைப்பை நம்மில் புதுப்பிக்குமாறு தூய ஆவியாரை வேண்டுவோம். இதன் வழியாக நாம், புனித பவுலின் காலடிகளைப் பின்பற்றியவர்களாக, இவ்வுலகை நற்செய்தியால் நிறைப்பதுடன், நம் சமுதாயங்களை உடன்பிறந்த உணர்வுகொண்ட இடங்களாக மாற்றி, உயிர்த்த இயேசுவை அனைவரும் சந்திக்க உதவுவோம்.

இவ்வாறு, திருத்தூதர் பணிகள் நூல் குறித்த தொடரினை இப்புதன் மறைக்கல்வி உரையுடன் நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

15 January 2020, 14:00