ரோமன் ரோட்டா நீதிபதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் ரோமன் ரோட்டா நீதிபதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

கிறிஸ்தவ தம்பதியர் பாதுகாக்கப்பட வேண்டும்

அக்கில்லா, பிரிசில்லா தம்பதியர் போன்று, பற்றுறுதியுடன் நற்செய்திக்கு சான்றுபகரும் கிறிஸ்தவ தந்பதியர், இன்று திருஅவைக்குத் தேவை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ரோமன் ரோட்டா எனப்படும் திருமணம் விவகாரம் தொடர்புடைய திருஅவையின் உச்ச நீதிமன்ற தலைவர் பேரருள்திரு Pio Vito Pinto  அவர்களை, சனவரி 25, இச்சனிக்கிழமை காலையில், திருப்பீடத்தில் சந்தித்தபின், அந்நீதிமன்றத்தின் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உட்பட 350 உறுப்பினர்களை, கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றினார்.

அக்கில்லா, பிரிசில்லா தம்பதியர் போன்று, பற்றுறுதியுடன் நற்செய்திக்கு சான்றுபகரும் கிறிஸ்தவ தந்பதியர், இன்று திருஅவைக்குத் தேவை என்று உரையாற்றிய திருத்தந்தை, கருத்தியல்கள் மற்றும், தனிப்பட்ட கோட்பாடுகளிலிருந்து திருமணத்தைக் காக்குமாறு, மேய்ப்பர்களைக் கேட்டுக்கொண்டார்.    

ரோமன் ரோட்டா நீதிமன்றத்தின் நீதித்துறை ஆண்டை துவக்கி வைத்து, அந்நீதிமன்றத்தின் உறுப்பினர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதர் பணிகள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அக்கில்லா, பிரிசில்லா தம்பதியர், திருமண வாழ்வுக்கு, புனிதமான எடுத்துக்காட்டு என்று கூறினார்.

நற்செய்தி அறிவிக்கும் திருமணமான தம்பதியர், தூய ஆவியாருக்குச் செவிமடுப்பவர்கள், புளிக்காரமாக சான்று பகர்பவர்கள் என்று கூறியத் திருத்தந்தை, நம் பங்குத்தளங்களில், குறிப்பாக, நகர்ப்புறப் பங்குத்தளங்களில் எல்லா விசுவாசிகளையும் அணுகுவதற்கு நேரமில்லாமல் உள்ளது, இவர்கள் அருளடையாளங்களில் பங்குபெற இயலாமலும், கிறிஸ்து பற்றிய அறிவின்றியும் உள்ளனர், இச்சூழலில், கிறிஸ்தவத் தம்பதியரின் நற்செய்தி பணி மிகவும் தேவைப்படுகின்றது என்று கூறினார்.  

பங்குத்தளங்களில், திருமணத் தயாரிப்பிலும், ஏனைய பணிகளிலும் கிறிஸ்தவத் தம்பதியர் முக்கிய பங்காற்றுமாறும், அவர்களைப் பாதுகாக்குமாறும் கூறியத் திருத்தந்தை, ரோமன் ரோட்டா நீதிமன்றப் பணியாளர்கள் தங்கள் பணிகளைத் தொடர்ந்து ஆக்கமுடன் ஆற்றுவதற்கு தான் செபிப்பதாகவும், தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 January 2020, 16:04