தேடுதல்

Vatican News
மூவேளை செப உரையின்போது - 050120 மூவேளை செப உரையின்போது - 050120  (Vatican Media)

கிறிஸ்து பிறப்பின் நோக்கமாக இருந்தது, உறவு - திருத்தந்தை

இயேசுவின் வருகை வழியாக நமக்கு கிட்டியது, நம்மை வழிநடத்தும் சட்டமல்ல, மாறாக, அவரே நம் முன் நடந்து நமக்கு வழிகாட்டுபவரானார் – திருத்தந்தையின் மூவேளை செப உரை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சனவரி 5, இஞ்ஞாயிறு நண்பகல் வழங்கிய மூவேளை செப உரையின்போது, கிறிஸ்மஸ் பெருவிழாவின் அர்த்தம் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைத்தந்தையுடன் குழந்தைகளுக்குரிய உறவை நமக்கு உருவாக்கித் தருவதே கிறிஸ்து பிறப்பின் நோக்கமாக இருந்தது என்று கூறினார்.

வத்திக்கான் புனித பேதுருப் பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தின், வார்த்தை 'மனுவுருவானார்' என்ற பகுதியை மையமாக வைத்து, இறைவனுடன் குழந்தைக்குரிய உறவை நமக்கு உருவாக்கி தந்துள்ள வார்த்தையாம் இறைவனுக்கு பதிலுரைப்பதன் வழியாக, அன்பின் புனிதர்களாக நாம் மாறமுடியும்', என்றுரைத்தார்.

இயேசு நம்மிடையே குடிகொள்ள மட்டும் வரவில்லை, மாறாக, நம்மில் ஒருவராகவே மாறினார், என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரின் வருகை வழியாக நமக்கு கிட்டியது, நம்மை வழிநடத்தும் சட்டமல்ல, மாறாக, அவரே நம் முன் நடந்து நமக்கு வழிகாட்டுபவரானார், என்று கூறினார்.

கிறிஸ்து பிறப்பின் வியத்தகு அடையாளங்கள் குறித்து நாம் தியானிக்கும்வேளையில், அது கதையல்ல, புராணம் அல்ல, மாறாக, மனிதனுக்கும் உலகுக்கும் உரிய இறைத்திட்டத்தின் முழு வெளிப்பாடு என்பதை இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் நமக்குச் சொல்லித்தருகிறது எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள் நம்மிடையே தொடர்ந்து வாழ்ந்து வருகிறார் என்றால், அது, அன்பின் புனிதர்களாக மாறுவதற்கு நமக்கு விடப்படும் அழைப்பாகும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனுக்கே சொந்தமான புனிதத்துவத்தை அருளின் கொடையாகப் பெறும் ஒவ்வொருவரும் அதனை பிறரன்பில் மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்

05 January 2020, 13:18