தேடுதல்

Vatican News
நைஜீரியாவில் பள்ளி நூலகத்தில் சிறார் நைஜீரியாவில் பள்ளி நூலகத்தில் சிறார்  (AFP or licensors)

ஒன்றிணைக்கும் கதைகளைச் சொல்லுங்கள்

திருத்தந்தையரின் உலக சமூகத் தொடர்பு நாள் செய்தி, செய்தியாளர்களின் பாதுகாவலராகிய புனித பிரான்சிஸ் தெ சேல்ஸ் விழாவான, சனவரி 24ம் தேதி, ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படுகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“நீ உன் மக்களுக்கும் உன் மக்களின் மக்களுக்கும் விவரித்துச் சொல்வாயாக(வி.ப.10,2) – வாழ்வு வரலாறாக மாறுகிறது” என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 54வது உலக சமூகத் தொடர்பு நாளுக்கென, சனவரி 24, இவ்வெள்ளியன்று செய்தி வெளியிட்டுள்ளார்.

வருகிற மே மாதம் 24ம் தேதி சிறப்பிக்கப்படும் 54வது உலக சமூகத் தொடர்பு நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியில், அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய கதைகள் சொல்லும் சோதனைகளைத் தவிர்த்து வாழ்வது, எக்காலத்தையும்விட, இக்காலத்தில் கத்தோலிக்கருக்கு அதிகம் தேவைப்படுகின்றது என்று, திருத்தந்தை கூறியுள்ளார். 

கதைகள் புனைதல், எல்லாக் கதைகளும் நல்லவை அல்ல, கதைகளின் கதை, என்றென்றும் புதுமையோடு விளங்கும் கதை, நம்மைப் புதுப்பிக்க அழைக்கும் கதை ஆகிய ஐந்து துணை தலைப்புகளுடன் இச்செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதர்கள் கதைகள் சொல்பவர்கள், மற்றும், அவர்கள், தங்கள் வாழ்வைப் பாதுகாத்துக் கொள்வதற்கு கதைகளோடு தங்களைப் பிணைத்துக்கொள்ளவேண்டியுள்ளது என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் யார் என்பதைப் புரிந்து கொள்ளவும், உணர்த்தவும் கதைகள் உதவுகின்றன என்று எடுத்துரைத்துள்ளார்.

கிறிஸ்துவின் வரலாறு, நம் கதை என்றும், அது எப்போதும் காலத்திற்கேற்றது, பயனுள்ளது என்றும், கடவுள், மனிதராக மாறும் அளவுக்கு, அவர் மனித சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் என்பதை இது காட்டுகிறது என்றும் கூறியுள்ள திருத்தந்தை, கடவுள் கதையாக மாறியதால், ஒவ்வொரு மனிதக் கதையும், விண்ணக கதையாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு மனிதக் கதையும் கடவுளுக்கு...

கடவுளின் அன்பாகிய தூய ஆவியார் நம்மில் எழுதுகிறார், அவர் எழுதுகையில் நம்மில் நல்லவைகளை உருவாக்குகிறார் மற்றும், அதைத் தொடர்ந்து நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறார் என்றும், மீண்டும் நினைவுபடுத்துதல் என்பது, அதை மனதிற்கு கொணர்ந்து, இதயத்தில் எழுதுவதாகும் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

நம் சொந்தக் கதை, ஒவ்வொரு மாபெரும் கதையின் ஓர் அங்கமாக மாறுகிறது என்றும், நம் கதைகளின் பதிவுகள் ஒரேமாதிரி இருந்தாலும்கூட, அவற்றைக் கடவுளிடம்  சொல்வது ஒருபோதும் பயனின்றி போகாது என்றும், நம் கதையை ஆண்டவரிடம் சொல்வது, அவர் நம்மீதும், மற்றவர் மீதும் வைத்துள்ள பரிவன்பில் நுழைவதாகும் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

நம் கதைகளை அன்னை மரியா கேட்பாராக என்று, அவருக்கு ஒரு செபம் சொல்லி, தனது செய்தியை நிறைவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

2020ம் ஆண்டின் உலக சமூகத் தொடர்பு நாள் செய்தியை, சனவரி 24, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார். இவ்வாண்டு இந்நாள் இயேசுவின் விண்ணேற்பு பெருவிழாவும் ஆகும்.

டுவிட்டர் செய்தி

மேலும், “இவ்வாண்டு உலக சமூகத் தொடர்பு நாளை, கதை சொல்வதற்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். நாம் வாழ்வில் தொலைந்து போகாமல் இருப்பதற்கு, நம் சொந்த நல்ல உண்மைக் கதைகளைப் புனைய வேண்டும். கதைகள், நாம் ஒன்றுசேர்ந்து முன்னோக்கிச் செல்வதற்கென, நம் மூலங்களையும், சக்தியையும் கண்டுபிடித்து அவற்றை கட்டியெழுப்ப உதவுகின்றன” என்ற சொற்கள், 54வது உலக சமூகத் தொடர்பு நாள் செய்தியை மையப்படுத்தி, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

24 January 2020, 15:41