ஃபின்லாந்து லூத்தரன் கிறிஸ்தவ சபையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு பிரதிநிதிகள் குழுவுடன் திருத்தந்தை ஃபின்லாந்து லூத்தரன் கிறிஸ்தவ சபையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு பிரதிநிதிகள் குழுவுடன் திருத்தந்தை 

திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவர்களாக, ஒன்றுசேர்ந்து செயல்படுவோம்

திருமுழுக்குப்பெற்ற கிறிஸ்தவர்களாகிய நாம், அன்றாட வாழ்வில், விசுவாசத்திற்குச் சான்று பகர்வதன் ஒரு பகுதியாக, வரவேற்பின் முக்கியத்துவத்தை உணர்வோம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்துவின் ஒரே மறையுடலின் உறுப்பினர்களாகிய கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தும், ஒருவர் ஒருவரின் சுமைகளைத் தாங்கிக்கொண்டும் வாழ வேண்டியவர்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளிடம் இவ்வெள்ளியன்று கூறினார்.

இதேபோல், வரவேற்கும் பண்பும், கிறிஸ்தவர்களின் ஒவ்வொரு நாள் வாழ்விலும், விசுவாசத்தின் பகிர்ந்துகொள்ளப்படும் சான்றாக உள்ளது என்றும், சனவரி 18, இச்சனிக்கிழமையன்று நாம் தொடங்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம், இந்த கிறிஸ்தவ ஒன்றிப்புப் பண்பை எடுத்துரைக்கின்றது என்றும், திருத்தந்தை கூறினார். 

ஃபின்லாந்து லூத்தரன் கிறிஸ்தவ சபையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு பிரதிநிதிகள் குழு ஒன்றை, சனவரி 17, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வில் எந்த முறையிலும் சேதமடைந்தவர்களில் நம்மைச் சந்திப்பதற்கு கிறிஸ்து விரும்புகிறார் என, திருமுழுக்குப்பெற்ற கிறிஸ்தவர்களாகிய நாம் நம்புகின்றோம் என்று கூறினார்.

திருமுழுக்குப்பெற்ற அனைவரும் ஒரே குழுமமாக, ஒன்றிணைந்து பயணிக்கின்றோம், தங்களின் திருமுழுக்கிற்காக நன்றி சொல்பவர்கள் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர்களின் இந்த நன்றியுணர்வு, தங்களின் அயலவர்களை பகைவர்களாக அல்லாமல், அன்புள்ள உடன்பிறப்புக்களாக, அவர்களுடன் தொடர்பை உருவாக்குகிறது மற்றும், அவர்கள்பால் இதயங்களை விரிவடையச் செய்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

ஆன்மீக கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும், கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடல், நாம் ஒன்றுசேர்ந்து இருப்பதை ஆழப்படுத்துவதற்கு உதவுகின்றது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஃபின்லாந்தில் இந்தப் பண்பில் தொடர்ந்து வளர்ந்து, வளம்பெற்று, மிகுந்த கனிதருமாறு கடவுள் ஏராளமான வரங்களைப் பொழிவாராக என்றும், தனக்காகச் செபிக்குமாறும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 January 2020, 14:53