தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

அமைதிக்காக எடுக்கப்படும் எல்லா முயற்சிகளுக்கும் ஆதரவு

நீதியும் அமைதியும் அச்சுறுத்தப்படும் இடங்களில், வன்முறையற்ற மற்றும், ஆயுதம் ஏந்தாமல் துணிச்சலுடன் பணியாற்றும் பல தன்னார்வலர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலக அமைதி நாளை ஊக்குவிப்பதற்கென, அமைதிக்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட திருஅவைகள், குறிப்பாக, திருஅவை கழகங்கள் மற்றும், இயக்கங்களை வாழ்த்துகிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

53வது உலக அமைதி நாளான சனவரி 01, இப்புதன், நண்பகலில் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் ஆற்றிய மூவேளை செப உரைக்குப்பின் இவ்வாறு கூறிய திருத்தந்தை, நீதியும் அமைதியும் அச்சுறுத்தப்படும் இடங்களில், வன்முறையற்ற மற்றும், ஆயுதம் ஏந்தாமல் துணிச்சலுடன் பணியாற்றும் பல தன்னார்வலர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன் என்று கூறினார்.

அதோடு, போர் இடம்பெறும் பல பகுதிகளில், அமைதிப் பணியாற்றும் படைவீரர்களையும்  நினைத்து, நன்றி சொல்வதாக உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு நாளும் ஒன்றுசேர்ந்து அமைதியான உலகை அமைப்பதற்குரிய நம்பிக்கையை ஒருபோதும் இழக்க வேண்டாமென, அனைத்து மத நம்பிக்கையாளர் மற்றும், நம்பிக்கையற்றவர்களைக் கேட்டுக்கொண்டார்.

ஏழைகளோடு தோழமையுணர்வு கொள்வதன் வழியாக, உடன்பிறந்தநிலை சந்திப்புக்களை நடத்துகின்ற, மற்றும் அமைதிக்காக முயற்சிகள் மேற்கொள்ளும் எல்லாருக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, தனக்காகச் செபிக்க மறக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.

இம்மூவேளை செப உரையை வத்திக்கான் புனித பேதுரு வளாகத்திலும்,  ஊடகங்கள் வழியாகவும் கேட்டுக்கொண்டிருக்கும் எல்லாருக்கும், புதிய ஆண்டில் அமைதியும், நன்மைத்தனமும் நிரம்பட்டும் என வாழ்த்திய திருத்தந்தை, தனக்கு புத்தாண்டு வாழ்த்து அனுப்பியிருந்த இத்தாலிய அரசுத்தலைவர் சேர்ஜோ மத்தரெல்லா அவர்களுக்கு, சிறப்பான செபங்களையும், நன்றியையும் தெரிவித்தார். 

புனித எஜிதியோ அமைப்பு நடத்திய, ‘இப்பூமியெங்கும் அமைதி’ என்ற பேரணிகளிலும், இத்தாலியின் ரவேன்னாவில் இடம்பெற்ற அமைதிப் பேரணியிலும் கலந்துகொண்டவர்களுக்கும் நன்றி கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் திருப்பலியின் மறையுரையில் இறைமக்களைக் கேட்டுக்கொண்டதுபோல மூவேளை செபத்திற்குப் பின்னும், திருப்பயணிகளை, ‘இறைவனின் புனித அன்னையே’ என மூன்று முறை சொல்லச் சொன்னார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 January 2020, 12:35