176 பேருடன் உக்ரேன் நாட்டு விமானம் விபத்துக்குள்ளான ஈரானிய பகுதி 176 பேருடன் உக்ரேன் நாட்டு விமானம் விபத்துக்குள்ளான ஈரானிய பகுதி 

ஈரானில் விமான விபத்து – திருத்தந்தையின் அனுதாபத் தந்தி

உக்ரைன் நாட்டு விமான விபத்தில் இறந்தோர் அனைவரையும், இரக்கம் நிறைந்த இறைவனின் அன்பில் ஒப்படைக்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உக்ரைன் நாட்டு விமானம், ஈரான் நாட்டில் விமான விபத்துக்கு உள்ளானதையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அனுதாபத்தை வெளிப்படுத்தும் தந்தி ஒன்றை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.

விமான விபத்தில் இறந்தோருக்க் இறையமைதி

ஈரான் நாட்டின் Tehran நகருக்கருகே நிகழ்ந்த விமான விபத்தில் இறந்தோர் அனைவரையும், இரக்கம் நிறைந்த இறைவனின் அன்பில் ஒப்படைப்பதாகவும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இறைவனின் சக்தியும், அமைதியும் கிடைக்கும்படி திருத்தந்தை தன் ஆசீரை வழங்கியுள்ளதாக கர்தினால் பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள தந்திச் செய்தி கூறுகிறது.

உக்ரைன் நாட்டு விமானம் விபத்து

சனவரி 8, இப்புதனன்று காலை 6 மணியளவில், ஈரான் நாட்டின் தலைநகர் Tehranன் Imam Khomeini விமானத் தளத்திலிருந்து, உக்ரைன் தலைநகர் Kyiv நோக்கி புறப்பட்ட உக்ரைன் நாட்டு விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த 176 பேரும் உயிரிழந்தனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

விமானம் புறப்பட்டு பத்து கிலோமீட்டர் தூரத்தில் நிகழ்ந்த இந்த விபத்திற்கு இன்னும் தெளிவான காரணங்கள் கிடைக்கவில்லை என்றும், இதில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர், உக்ரைன் மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

ஆஸ்திரேலியாவுக்காக செபிக்க...

மேலும், சனவரி 8, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய  மறைக்கல்வி உரையின் இறுதியில், ஆஸ்திரேலியாவின் பல பகுதிகள் தீயால் பாதிக்கப்பட்டுள்ளதைக் குறித்து தன் கவலையை வெளியிட்டதோடு, கூடியிருந்தோரையும், மக்கள் அனைவரையும், ஆஸ்திரேலியாவுக்காக செபிக்குமாறு அழைப்புவிடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 January 2020, 15:05