தேடுதல்

Vatican News
மூவேளை செப உரையின்போது - 190120 மூவேளை செப உரையின்போது - 190120  (Vatican Media)

இறைவனின் அன்பால் ஆச்சரியப்படுத்தப்படுவது தொடரட்டும்

இயேசுவின் மீது தூய ஆவியார் இறங்கி வந்ததைக் கண்ணுற்ற புனித திருமுழுக்கு யோவான், இயேசுவுக்கு சான்று பகரவேண்டிய தன் ஆவலை அடக்க முடியாதவராக இருந்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

ஒரு புதியத் துவக்கத்துடன் நம் விசுவாசப்பயணத்தில் தொடர்ந்து பயணிப்போம் என, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 19, இஞ்ஞாயிறன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த ஏறக்குறைய 30,000 திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருக்காட்சித் திருவிழா, மற்றும், இயேசுவின் திருமுழுக்கைத் தொடர்ந்து, இஞ்ஞாயிறு திருப்பலி வாசகமும் இயேசு வெளிப்படுத்தப்பட்டதைக் குறித்தே எடுத்துரைக்கின்றது என்றும், இறைவனின் அன்பால் நாம் ஆச்சரியப்படுத்தப்படும் நிலை, முடிவின்றி தொடரவேண்டும் என்றும் கூறினார்.

இயேசுவின் மீது தூய ஆவியார் இறங்கி வந்ததைக் கண்ணுற்ற புனித திருமுழுக்கு யோவான் அவர்கள், இயேசுவுக்கு சான்று பகரவேண்டிய தன் ஆவலை அடக்க முடியாதவராக இருந்ததை இங்கு காண்கிறோம் என்றுரைத்த திருத்தந்தை, முதலில், இறைவனின் அன்பார்ந்த மகன், பாவிகளுடன் கூடிய ஒருமைப்பாட்டில் அவர்களோடு வரிசையில் நின்றது, புனித திருமுழுக்கு யோவானுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது எனவும் கூறினார்.

இறைவனுக்கென மனிதன் எதையாவது பலிகொடுப்பது, அல்லது, தியாகம் செய்வதை பல மதங்களில் கண்டுவரும் உலகில், இறைவன் தன் மகனையே மனித குல மீட்புக்காக பலி கொடுக்க முன்வருவதை, கிறிஸ்தவ மதத்தில் காண்கிறோம் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித திருமுழுக்கு யோவான், 'இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்' என அன்று கூறிய வார்த்தைகளையே, இன்றும், நாம் திருப்பலிகளில் பயன்படுத்துக்கிறோம் என்றார்.

பாவிகளாகிய நம்முடன் ஒருமைப்பாட்டை அறிவித்து, நம் மீட்புக்காக, நம் பக்கம் நிற்கும் இறை இரக்கத்தை கண்டுகொண்டு, நம் பயணத்தை மீண்டும் புதிதாகத் துவக்குவோம், ஏனெனில், நாம் பாவிகள் எனினும் அடிமைகள் அல்ல, இறைவனின் குழந்தைகள் என மேலும் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

19 January 2020, 12:41