தே தேயும் திருவழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் தே தேயும் திருவழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ்  

நகரங்களில், திருஅவையில் தடைகள் அகற்றப்படுவதாக

மனித உடன்பிறந்தநிலை மற்றும், தோழமையுணர்வை ஊக்குவிப்பதில், ஒவ்வொரு நாளும் எவ்வளவு நன்மையான காரியங்கள் ஆற்றப்பட்டுள்ளன என்பதைப் பார்த்து நம் ஆண்டவர் அகமகிழ்கின்றார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மற்றவரோடு நேரம் செலவழிப்பது, அவர்கள் வாழ்வில் கடவுளின் பிரசன்னத்திற்கும், செயலுக்கும் செவிமடுப்பது, உதவிக்காக எழுப்பும் அழுகுரலைக் கேட்பது மற்றும், கிறிஸ்து அவர்களைப் பார்ப்பதுபோல் பார்ப்பது ஆகியவை, அன்புச் செயல்கள் ஆகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 31, இச்செவ்வாயன்று கூறினார்.

இவ்வாறு செய்வதோடு, வார்த்தைகளைவிட, செயல்களால் நற்செய்தியின் புதிய வாழ்வுக்குச் சாட்சியம் பகர்வதும், உண்மையான நிலவரங்களை மாற்றியமைக்கும் உண்மையான அன்புப் பணி என்றும், இதற்காகவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.  

2019ம் ஆங்கில ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31, இச்செவ்வாய் மாலை 5 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், கடவுளின் தாய் புனித கன்னி மரியா திருவிழா திருவிழிப்பு திருப்புகழ்மாலை வழிபாட்டில், மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

குறிப்பாக, உரோம் நகரில் வாழ்வோர்க்கென உரைத்த திருத்தந்தை, இவ்வாறு செய்வதால், இந்நகரத்திற்கும், திருஅவைக்கும், புதிய காற்றைக் கொணரும் என்று கூறினார்.

இந்த முக்கியமான மறைப்பணியை ஆற்றுவதற்கு, தங்களிடம் போதுமானது இல்லை என, எவரும் அஞ்சவோ, நினைக்கவோ கூடாது என்றும், கடவுள் நம் திறமையை வைத்து அல்ல, மாறாக, நாம் இருப்பதாலும், நம் இயலாமையை உணர்வதாலும் நம்மைத் தேர்ந்துகொண்டார் என்பதை நினைவில் இருத்த வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

கடவுள் இந்த உலகில் நுழைவதற்கு, சமுதாயத்தின் விளிம்புநிலையில் இருப்பவர்களையும், நகரங்களில் இயலாதவர்களாக இருப்பவர்களையும் எவ்வாறு தேர்ந்துகொண்டார் என்பதை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் தீர்மானம் தெளிவாக இருக்கின்றது, அவர் தம் அன்பை வெளிப்படுத்த, ஒரு சிறிய, இழிவாகக் கருதப்பட்ட நகரைத் தேர்ந்துகொண்டார் என்று கூறினார்.

மீட்பு, ஓர் ஏழைப் பெண்ணின் வயிற்றில்

அவர் எருசலேமை அடைந்தபோது, பாவிகளோடும், புறக்கணிக்கப்படுபவர்களோடும் சேர்ந்துகொண்டார் என்றும், அவர் அவர்களை ஒருபோதும் கைவிடவில்லை என்றும், இயேசுவின் பிறப்பும், அவரின் துவக்க கால வாழ்வும், நம் நகரங்களில் அவரின் பிரசன்னம் இருப்பதை உணர அழைப்பு விடுக்கின்றன என்றும், திருத்தந்தை கூறினார்.

எனவே, வீடுகளில், தெருக்களில் மற்றும், வளாகங்களில் வாழ்கின்ற அவர்களை, விசுவாச, தியான மற்றும், அருளின் புதிய கண்களுடன் பார்ப்பதற்கு, கடவுளின் அருளை நாம் இறைஞ்ச வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, கடவுள் நம் மத்தியில் தொடர்ந்து வாழ்கிறார் மற்றும், நம்மோடு நடக்கிறார், அவரின் வாக்குப் பிறழாமை தெளிவானது, மீட்பு, ஓர் ஏழைப் பெண்ணின் வயிற்றில் தொடங்கியது என்றும் கூறினார்.

 

கடவுளின் தேர்வு அசாதாரணமானது, கடவுள் வரலாற்றை, அரசு மற்றும் மத நிறுவனங்களிலுள்ள வல்லமைபடைத்த மனிதர்கள் வழியாக மாற்றவில்லை, மாறாக, மரியா போன்ற பேரரசின் விளிம்புகளிலுள்ள பெண்களோடு வரலாற்றைத் தொடங்குகிறார் என்று கூறிய திருத்தந்தை, அமைதிக்காகப் பணியாற்றுவதும், தேவையில் இருப்போருக்கு உதவுவதும், நம் பதிலாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற திருப்புகழ்மாலை வழிபாட்டைத் தொடர்ந்து திருநற்கருணை ஆசீரும், தே தேயும் நன்றிப் பாடலும் நடைபெற்றன. இந்த திருவழிபாட்டை நிறைவு செய்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் குடிலையும் பார்வையிட்டு செபித்தார்.

டுவிட்டர்

மேலும், “கடந்த ஆண்டில் தம் அருளால் நம்மைக் காத்து வந்த கடவுளுக்கு நன்றி சொல்வோம், மகிழ்வோடு, புகழ் பாடலை அவரை நோக்கி எழுப்புவோம்” என்ற சொற்களையும், திருத்தந்தை, டிசம்பர் 31, இச்செவ்வாய் மாலையில் தன் டுவிட்டர் செய்தியில் பதிவு செய்திருந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 January 2020, 16:07