அமைதிப் புறாவுடன் திருத்தந்தை அமைதிப் புறாவுடன் திருத்தந்தை  

2020ம் ஆண்டு உலக அமைதி நாள் – திருத்தந்தையின் செய்தி

சமுதாயத்தில் உள்ள பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ள இயலாமை என்ற குறைபாடே, நம்முள், மோதல்களையும், போர்களையும் உருவாக்குகின்றன – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட, 2020ம் ஆண்டின் உலக அமைதி நாளுக்குரிய செய்தியின் தலைப்பு, "அமைதி, நம்பிக்கையின் ஒரு பயணமாக..." என்பதாகும்.

ஒவ்வோர் ஆண்டும், புத்தாண்டு நாளன்று கத்தோலிக்கத் திருஅவை, உலக அமைதி நாளைச் சிறப்பித்து வருவதையொட்டி, திருத்தந்தை, 2020ம் ஆண்டுக்கென வெளியிட்டுள்ள இச்செய்தியின் உப தலைப்பாக, உரையாடல், ஒப்புரவு மற்றும் சுற்றுச்சூழலையொட்டிய மனமாற்றம் என்ற மூன்று அம்சங்களையும் இணைத்துள்ளார்.

பிரச்சனை மற்றும் தடைகளுக்கு முன் விளங்கும் நம்பிக்கை

ஐந்து பகுதிகளைக் கொண்ட இச்செய்தியில், "அமைதி, பிரச்சனை மற்றும் தடைகளுக்கு முன்னர், நம்பிக்கையின் ஒரு பயணம்" என்ற முதல் பகுதியில், அமைதிக்காக நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை, எத்தனை தடைகளையும், பிரச்சனைகளையும் சந்தித்தாலும், முன்னோக்கிச் செல்ல நம்மை உந்தித்தள்ளுகிறது என்று, திருத்தந்தை தன் செய்தியைத் துவக்கியுள்ளார்.

சமுதாயத்தில் உள்ள பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ள இயலாமை என்ற குறைபாடே, நம்முள், மோதல்களையும், போர்களையும் உருவாக்குகின்றன என்பதை, இப்பகுதியில் தெளிவுபடுத்தும் திருத்தந்தை, மனித சமுதாயம், தன் நினைவிலும், உடலிலும், போர்களின் காயங்களையும், வடுக்களையும் தாங்கி வாழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மனிதர்கள் நடுவே, நிலையற்ற தன்மையும், அச்சமும் உருவாகும் வேளை, அவற்றிற்கு தீர்வாக, மக்களிடையே உறவையும், உரையாடலையும் வளர்ப்பதற்குப் பதில், பகைமை உணர்வுகள் என்ற நஞ்சை இவ்வுலகம் விதைக்கிறது என்பதை, தன் ஜப்பான் நாட்டு திருத்தூதுப் பயணத்தில் இன்னும் ஆழமாக தான் உணர்ந்ததாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தியின் முதல் பகுதியில் கூறியுள்ளார்.

நினைவு, ஒருங்கிணைப்பு, உடன்பிறந்த நிலை

"நினைவு, ஒருங்கிணைப்பு மற்றும் உடன்பிறந்த நிலை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட செவிமடுத்தலின் பயணமே, அமைதி" என்பது, திருத்தந்தை வெளியிட்டுள்ள இச்செய்தியின் இரண்டாம் பகுதி.

1945ம் ஆண்டு வரலாற்றில் என்ன நடந்தது என்பதை மனிதகுலத்தின் மனசாட்சிக்கு, தொடர்ந்து நினைவுறுத்தும் வண்ணம், அணுகுண்டு தாக்குதலிலிருந்து தப்பித்து ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் வாழ்ந்துவருவோர், நமது நினைவுகளை தொடர்ந்து சுத்தம் செய்து வருகின்றனர் என்று, இப்பகுதியின் துவக்கத்தில், திருத்தந்தை கூறியுள்ளார்.

வரலாற்று நினைவுகளே, நம்பிக்கை என்ற தொடுவானத்தில் தோன்றும் ஒளிக்கீற்றுகள் என்பதை, இப்பகுதியில் சுட்டிக்காட்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகிற்கு இன்று வெறுமையான வார்த்தைகளும், வாக்குறுதிகளும் தேவையில்லை, மாறாக, சமாதானம் செய்வோரின் சாட்சியம் தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.

அமைதி வழிமுறை என்பது, பொறுமையாக, ஒருங்கிணைந்து, உண்மையையும், நீதியையும் தேடுவதற்கு மேற்கொள்ளப்படும் பயணம் என்றும், போர்களில் இறந்தோரின் நினைவுக்கு நாம் செய்யும் மரியாதை என்றும், திருத்தந்தை, இப்பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.

நாம் ஒருவரோடு ஒருவர் ஒப்புரவாகும்பொருட்டு, கிறிஸ்து, தம் உயிரை அளித்தார் (காண்க. உரோமையர் 5:6-11) என்பது நம் கிறிஸ்தவ அனுபவம் என்பதை, இப்பகுதியில் சுட்டிக்காட்டும் திருத்தந்தை, நீதியின் வழியாக, ஒப்புரவைக் கொணர்வதில் திருஅவை மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளது என்று எடுத்துரைத்துள்ளார்.

ஒப்புரவின் பயணமே அமைதி

"உடன்பிறந்த ஒருமைப்பாட்டில் உருவாகும் ஒப்புரவின் பயணம், அமைதி" என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அமைதி நாள் செய்தியின் மூன்றாம் பகுதியை வடித்துள்ளார்.

விவிலியம், குறிப்பாக, இறைவாக்கினர்கள் கூற்றுகள், நாம் அனைவருமே இறைவனின் மக்கள் என்பதையும், எனவே, ஒருவரையொருவர் மதிப்புடன் கண்ணோக்கவேண்டும் என்பதையும் வலியறுத்துகிறது என்று திருத்தந்தை இப்பகுதியில் கூறியுள்ளார்.

"ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?" என்ற பேதுருவின் கேள்விக்கு, இயேசு அவரிடம் கூறியது; "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்." (மத். 18:21-22). பேதுருவுக்கும், இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்த இவ்வுரையாடலை மேற்கோளாகக் காட்டியுள்ள திருத்தந்தை, ஒப்புரவுக்கு அழைக்கும் இப்பாதையை நாம் பின்பற்றவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

சுற்றுச்சூழையொட்டிய மனமாற்றம்

"சுற்றுச்சூழையொட்டிய மனமாற்றத்தின் பயணம், அமைதி" என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள உலக அமைதிச் செய்தியில், நான்காவது பகுதியின் தலைப்பாக அமைந்துள்ளது.

மற்றவர்கள் மீது நாம் காட்டும் பகைமை, நமது பொதுவான இல்லமான பூமியை மதிக்காமல், சுற்றுச்சூழலை சீரழிக்கும் நம் செயல்பாடுகளிலும் வெளியாகிறது என்று, திருத்தந்தை இப்பகுதியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வுலகை, பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார் (தொ.நூ. 2:15), என்பதை நினைவுறுத்தும் திருத்தந்தையின் செய்தி, நமது வருங்கால தலைமுறையினருக்கு வளமானதொரு பூமியை விட்டுச்செல்வது நமது கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச்சூழலையொட்டிய மனமாற்றம் என்பது, வாழ்வை புதியதொரு கண்ணோட்டத்துடன் நோக்கவும், இறைவன் நமக்கு தாராளமாக வழங்கியுள்ள வளங்களைப் பகிரவும் நம்மை அழைக்கிறது என்பதை, இப்பகுதியின் இறுதியில் திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.

நம்பும் அனைத்தையும் பெறுகிறோம்

"நாம் நம்பிக்கைக்கொள்ளும் அனைத்தையும் நாம் பெறுகிறோம்" என்று, சிலுவையின் புனித யோவான் கூறிய சொற்களை, உலக அமைதிச் செய்தியின் இறுதிப்பகுதிக்கு தலைப்பாக வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி உருவாகும் என்ற நம்பிக்கை நமக்கு இல்லையெனில், அமைதி தோன்றுவது அரிது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

அமைதி உருவாகும் என்று நம்பிக்கை கொள்வதும், நம்மைப்போலவே, மற்றவர்களுக்கும் அமைதி தேவை என்று எண்ணுவதும், அமைதியைக் கொணரும் நம்பிக்கை பயணம் என்று இப்பகுதியில் திருத்தந்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

அச்சமே, மோதல்களின் பிறப்பிடம்

அச்சமே, பல வேளைகளில், நம் மோதல்களின் பிறப்பிடமாக அமைகிறது என்று கூறியுள்ள திருத்தந்தை, நமக்கு விடுதலை வழங்கி, நம்மிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல், சோர்வுறாமல் நம்மீது அன்புகூரும் இறைவனின் பண்பிலிருந்து நாம் உந்துசக்தி பெறவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

அமைதியின் இறைவன் நம்மை ஆசீர்வதித்து, நம் உதவிக்கு வருவாராக, அமைதியின் இளவரசரை இவ்வுலகிற்கு வழங்கிய அன்னை மரியா, ஒப்புரவை நோக்கி நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் நம்மோடு துணை வருவாராக, இவ்வுலகிற்கு வருகை தரும் அனைத்து ஆண்களும், பெண்களும், அமைதியின் வாழ்வை உணர்வார்களாக என்ற ஆசி மொழிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2020ம் ஆண்டுக்கென உருவாக்கியுள்ள உலக அமைதி நாள் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

53வது உலக அமைதி நாள்

திருத்தந்தை புனித 23ம் ஜான் அவர்கள், ‘உலகில் அமைதி’ என்ற பொருள்படும், ‘Pacem in Terris’ என்ற திருமடலை, 1963ம் ஆண்டு வெளியிட்டார். அந்தத் திருமடலின் நினைவாக, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், உலக அமைதி நாளை, 1967ம் ஆண்டு உருவாக்கினார். அவரது விருப்பத்தின்படி, 1968ம் ஆண்டு, சனவரி 1ம் தேதி, முதல் உலக அமைதி நாள் சிறப்பிக்கபட்டது. இவ்வாண்டு சிறப்பிக்கப்பட்ட 53வது உலக அமைதி நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "அமைதி, நம்பிக்கையின் ஒரு பயணமாக..." என்ற தலைப்பில் தன் செய்தியை வெளியிட்டுள்ளார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 January 2020, 10:40