விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை 

விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை

வாழ்வைப் பாதுகாக்கப் போராடுவோரையும், தங்கள் நோயின் காரணமாக வாழ்வின் இறுதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளவர்களையும் மையப்படுத்தி, விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் ஆண்டு கூட்டம் நடைபெற்றதை, திருத்தந்தை பாராட்டினார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவப் படிப்பினைகளும், கோட்பாடுகளும் நேரத்திற்கு தகுந்ததுபோல் மாறும் கொள்கைகள் அல்ல எனினும், அவை, கடினமான, மாற்ற இயலாத ஓர் அமைப்பும் அல்ல என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் உறுப்பினர்களிடம் கூறினார்.

விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் ஆண்டு கூட்டத்தின் இறுதியில், இப்பேராயத்தின் உறுப்பினர்கள், சனவரி 30 இவ்வியாழனன்று திருத்தந்தையைச் சந்தித்த வேளையில், கிறிஸ்தவ கோட்பாடுகளின் முழுமையைப் பாதுகாத்து, அவற்றை உலகிற்கு வழங்கிவரும் இப்பேராயத்தின் பணிகளை பாராட்டினார்.

கோட்பாடுகளும், படிப்பினைகளும், வாழ்கின்ற யதார்த்தத்தின் வெளிப்பாடுகளாக இருக்கவேண்டும் என்றும், அவற்றின் அடித்தளமாக, உயிர்த்த இயேசுவின் பெயரும், உருவமும் விளங்கவேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பேராயத்தின் உறுப்பினர்களிடம் கூறினார்.

வாழ்வைப் பாதுகாக்கப் போராடுவோரையும், தங்கள் நோயின் காரணமாக வாழ்வின் இறுதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளவர்களையும் மையப்படுத்தி, இவ்வாண்டின் ஆண்டு கூட்டம் நடைபெற்றதை, திருத்தந்தை பாராட்டினார்.

வாழ்வை, அதன் பயன்களையும், திறனையும் வைத்து மட்டும் எடைபோடும் போக்கும், 'வாழத் தகுதியற்றவர்கள்' என்று இவ்வுலகம் முத்திரை குத்தும் போக்கும், இன்றைய சமுதாய, மற்றும் கலாச்சாரச் சூழலில் வளர்ந்துவருவதைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் கவலையை வெளியிட்டார்.

வாழ்வை, கழிவென ஒதுக்கும் கலாச்சாரத்திற்கு எதிராக எந்த ஒரு சமுதாயம் மாற்று சிந்தனைகளை வலியுறுத்துகிறதோ, அதுவே, கலாச்சாரத்தில் வளர்ச்சிபெற்ற சமுதாயமாகக் கருதப்படவேண்டும் என்று, திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

2020ம் ஆண்டின், 28வது நோயாளர் உலக நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ள நல்ல சமாரியரைக் குறித்து தன் உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, காயப்பட்ட, நோயுற்ற மக்களைக் காப்பது, திருஅவையின் பணிகளில் விளங்கும் இலக்கணம் என்று எடுத்துரைத்தார்.

நலிவுற்ற மனிதர்களுடன் தன் நெருக்கத்தையும், பகிர்வையும் வெளிப்படுத்திய புனித அன்னை தெரேசாவின் வாழ்வு, மனித வாழ்வின், குறிப்பாக, மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் மனித வாழ்வின் மாண்பை உணர்த்தியது என்பதை, திருத்தந்தை, தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

மனித வாழ்வை, சிறப்பாக, சிறியோரின் வாழ்வைப் பாதுகாக்க, கத்தோலிக்கத் திருஅவையில் தேவைப்படும் அனைத்து சட்ட, திட்டங்களையும் ஆய்வு செய்து, தகுந்த வழிமுறைகளை வழங்கவேண்டும் என்று விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் உறுப்பினர்களிடம் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2020, 14:47