திருப்பீடத்துடன் தூதரகத் தொடர்புகள் கொண்டிருக்கும் உலகின் 183 நாடுகளைச் சேர்ந்த தூதர்களை சந்தித்த திருத்தந்தை திருப்பீடத்துடன் தூதரகத் தொடர்புகள் கொண்டிருக்கும் உலகின் 183 நாடுகளைச் சேர்ந்த தூதர்களை சந்தித்த திருத்தந்தை 

பன்னாட்டு தூதர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை

2019ம் ஆண்டில் தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணங்கள், உலகில் நிலவும் முக்கியமான சிக்கல்களையும், அவை நமக்கு உருவாக்கும் வாய்ப்புக்களையும் தெளிவாக்கின – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

குழந்தையொன்று பிறக்கும்போது எழும் அழுகுரல், மகிழ்வையும், நம்பிக்கையையும் உருவாக்குவதுபோல், புத்தாண்டு ஒன்று பிறந்துள்ள வேளையில், நம்பிக்கை உருவாக்குகிறது என்ற கருத்தை மையப்படுத்தி, கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பன்னாட்டு தூதர்களுக்கு வழங்கிய உரையில் கூறினார்.

திருப்பீடத்துடன் தூதரகத் தொடர்புகள் கொண்டிருக்கும் உலகின் 183 நாடுகளைச் சேர்ந்த தூதர்களை, சனவரி 9, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்து அவர்களுக்கு, புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த வேளையில், கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளமாக விளங்கும் நம்பிக்கையை மையப்படுத்தி, திருத்தந்தை தன் கருத்துக்களைப் பதிவு செய்தார்.

பன்னாட்டு உறவுகளின் தலையாய நோக்கம்

அமைதி மற்றும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம் ஆகியவை, திருப்பீடம் கொண்டிருக்கும் பன்னாட்டு உறவுகளின் தலையாய நோக்கமாக உள்ளது என்பதை தன் உரையின் துவக்கத்தில் தெளிவுபடுத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நோக்கம், திருப்பீடத்தில் செயலாற்றும் பல துறைகளிலும், திருப்பீடத்தின் சார்பாக பல நாடுகளில் பணியாற்றும் பிரதிநிதிகளிடமும் வெளிப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

இந்த நோக்கங்களை செயல்படுத்தும் முறையில், கடந்த ஆண்டு, திருப்பீடம், காங்கோ குடியரசு, மத்திய ஆப்ரிக்க குடியரசு, புர்கினா ஃபாசோ மற்றும் அங்கோலா ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்துகொண்டதை, திருத்தந்தை நினைவுகூர்ந்தார்.

2019ம் ஆண்டின் திருத்தூதுப் பயணங்கள்

2019ம் ஆண்டில் தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணங்களை தான் திரும்பிப் பார்க்க விழைவதாகக் கூறியத் திருத்தந்தை, இப்பயணங்கள், உலகில் நிலவும் பல்வேறு முக்கியமான சிக்கல்களையும், அவை நமக்கு உருவாக்கும் வாய்ப்புக்களையும் தெளிவாக்கின என்று எடுத்துரைத்தார்.

கடந்த ஆண்டின் சனவரி மாதம் பானமா நாட்டில் நிகழ்ந்த 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் தான் கலந்துகொள்ள சென்றபோது, அங்கு, உலகின் ஐந்து கண்டங்களைச் சார்ந்த இளையோர், நம்பிக்கையோடும், கனவுகளோடும், கூடிவந்து, உரையாடல்களையும், செபங்களையும் மேற்கொண்டது, நாம் பெற்றிருக்கும் பெரும் வாய்ப்பாகத் தெரிந்தது என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சிறாரின் பாதுகாப்பு

திருஅவைப் பணியாளர்களும், வயதில் முதிர்ந்தோரும், இளையோர் கொண்டிருக்கும் நம்பிக்கையைக் குலைக்கும் வண்ணம், அவர்களை, தவறாகப் பயன்படுத்திவரும் கொடுமையைக் குறித்து சிந்திக்க, கடந்த ஆண்டு வத்திக்கானில் நடைபெற்ற முக்கிய ஆயர்கள் கூட்டத்தைக் குறித்து திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார்.

இளையோரையும், சிறியோரையும் தவறான வழிகளில் பயன்படுத்தும் போக்கு உலகின் பல துறைகளில் நிகழ்வதைத் தடுக்க, நம்மிடம் இருக்கும் ஒரு சிறந்த கருவி கல்வி, என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி, உலகளாவிய அளவில், தான் ஒரு நிகழ்வை திட்டமிட்டுள்ளதாகவும், அந்நிகழ்வில், கல்வியின் தாக்கம் குறித்து பேசப்படும் என்றும் தெரிவித்தார்.

கல்வி என்பது, கல்விக்கூடங்களில் கிடைப்பது மட்டுமல்ல, மாறாக, அது, குடும்பம், திருஅவை, சமுதாய அமைப்புக்கள் என்று பல வடிவங்களில் கிடைக்கும் ஓர் அற்புதக் கொடை என்பதை திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.

மாற்றங்களைக் கொணர முயலும் இளையோர்

உண்மையைத் தேடும் இளையோர், பல வழிகளிலும் மாற்றங்களைக் கொணர முயற்சிகளைத் துவக்கியுள்ளனர் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பெற்றுள்ள இளையோர், உலகத் தலைவர்களை இந்தப் பிரச்சனையின் பக்கம் திருப்புவதற்கு அரும்பாடுபட்டு வருகின்றனர் என்பதை, குறிப்பிட்டுப் பேசினார்.

சுற்றுச்சூழல் குறித்து இளையோர் உணரும் ஆபத்துக்களை, உலகத் தலைவர்கள் உணரவில்லை என்பதை, அண்மையில், மத்ரித் நகரில் நடந்து முடிந்த பருவநிலை மாற்ற உச்சி மாநாடு COP 25 நமக்கு உணர்த்தியுள்ளது என்பதை, வருத்தத்துடன் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அமேசான் சிறப்பு மாமன்றம்

சுற்றுச்சூழலைக் குறித்து சிந்திக்கும் வேளையில், அமேசான் பகுதியை மையப்படுத்தி, வத்திக்கானில் கடந்த ஆண்டு நிகழ்ந்த சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தையும் தன் உரையில் நினைவுகூர்ந்த திருத்தந்தை, ஒருங்கிணைந்த சூழலியல், பழங்குடியினரின் உரிமைகள் ஆகியவற்றில் திருஅவை கூடுதல் கவனம் செலுத்த விழைகிறது என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.

அமெரிக்கக் கண்டத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அமேசான் காடுகளைப்பற்றி சிந்திக்கும் வேளையில், தென் அமெரிக்க கண்டத்தின் பல நாடுகளில் நிகழும் மோதல்களையும் நாம் சிந்திக்க வேண்டும் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.

இந்த மோதல்களின் அடித்தளமாக விளங்கும் சமநிலையற்ற தன்மை, அநீதி, ஊழல், வறுமை, குலைந்துபோன மனித மாண்பு ஆகியவை குறித்து தென் அமெரிக்க நாடுகளில் உள்ள தலைவர்கள் அவசரமாகவும், அவசியமாகவும் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார், திருத்தந்தை.

ஐக்கிய அரபு அமீரகப் பயணம்

2019ம் ஆண்டில் தான் மேற்கொண்ட இரண்டாவது பயணம், ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்றது என்பதை தன் உரையில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தானும், அல் அசார் தலைமைக் குருவும் கையொப்பமிட்ட ஓர் அறிக்கை, உடன்பிறந்த உணர்வுடன் உலகத்தினர் இணைந்து வாழமுடியும் என்பதையும், அதன் வழியே அமைதியைக் கொணர இயலும் என்பதையும், உலகிற்குக் கூறுகிறது என்று எடுத்துரைத்தார்.

தான் மொரோக்கோ நாட்டிற்கு மேற்கொண்ட பயணத்தின் இதயமாக, அமைதி மற்றும் நம்பிக்கை ஆகிய விழுமியங்கள் விளங்கின என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, மத்தியக் கிழக்குப் பகுதி நாடுகள் பலவற்றில் நிலவும் அமைதியற்ற நிலையைக் குறித்து, இவ்வுரையில் விவரமாக எடுத்துரைத்தார்.

மத்தியக் கிழக்குப் பகுதி நாடுகள்

பத்து ஆண்டுகளாக போரினால் சீரழிக்கப்பட்டுள்ள சிரியாவைக் குறித்து கவலையுடன் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோடிக்கணக்கில் அந்நாட்டை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோருக்கு புகலிடம் கொடுத்துவரும் ஜோர்டான், மற்றும் லெபனான் நாடுகளை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

அண்மையில், ஈரானுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே உருவாகியுள்ள மோதல்களால், போரின் விளைவுகளிலிருந்து மீண்டுவரும் ஈராக் நாடு பாதிக்கப்பட்டுள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது என்பதை குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, அப்பகுதிகளில், மீண்டும் உரையாடல் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற தன் வேண்டுகோளை வலியுறுத்திக் கூறினார்.

ஏமன் மற்றும் லிபியா நாடுகளில்...

மத்தியக் கிழக்குப் பகுதியில், பல ஆண்டுகளாகத் துன்புற்றுவரும் ஏமன் நாட்டில், மனிதாபிமான பேரிடர் நிகழ்ந்து வருகிறது என்பதை, தன் உரையில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏமன், லிபியா ஆகிய நாடுகளில் நிலவும் கொடுமைகளிலிருந்து தப்பித்துச் செல்லும் பல்லாயிரம் மக்கள், மனித வர்த்தகம், பாலியல் கொடுமைகள் ஆகிய அநீதிகளுக்கு உள்ளாவதையும் எடுத்துரைத்தார்.

கொடுமைகளிலிருந்து தப்பித்துச் செல்வோர் அடுத்த நாடுகளில் புகலிடம் தேடும் வேளையில், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவது மனிதகுலத்தின் கடமை என்பதை, தன் உரையில் வலியுறுத்திக் கூறினார், திருத்தந்தை.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில பயணம்

கிழக்கு ஐரோப்பாவின் பல்கேரியா, வட மாசிடோனியா மற்றும் ரொமேனியா ஆகிய நாடுகளில் கடந்த ஆண்டு மேற்கொண்ட பயணங்களைக் குறித்து தன் உரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிழக்கும் மேற்கும் சந்தித்து, உரையாடல்களை மேற்கொள்வதன் அவசியத்தை, இப்பயணங்கள் தனக்கு உணர்த்தின என்று எடுத்துரைத்தார்.

போர் கருவிகள் அல்ல, உரையாடல்

நாடுகளுக்கிடையே எழும் வேறுபாடுகளை, போர் கருவிகள் வழியாக அல்லாமல், உரையாடல் வழியே தீர்த்துக்கொள்வதே, நமக்கு மிகவும் தேவையான யுக்தி என்று கூறியத் திருத்தந்தை, பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டதன் முப்பதாம் ஆண்டு நிறைவு, கடந்த ஆண்டு சிறப்பிக்கப்பட்ட வேளையில், எந்த ஒரு சுவரையும் நாம் வீழ்த்த முடியும் என்பதை நாம் குறிப்பாக நினைவுகூர்ந்தோம் என்று கூறினார்.

மொசாம்பிக், மடகாஸ்கர், மவுரிசியஸ் பயணம்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்ரிக்காவின் மொசாம்பிக், மடகாஸ்கர், மவுரிசியஸ் ஆகிய நாடுகளில் மேற்கொண்ட பயணங்கள் குறித்துப் பேசியத் திருத்தந்தை, குடும்பங்களையும், சமுதாயக் குழுக்களையும் மையப்படுத்தி உருவாகும் அரசுகளின் முயற்சிகள் வெற்றிபெறும் என்ற எண்ணத்தை இப்பயணங்கள் தனக்குள் உருவாக்கின என்று எடுத்துரைத்தார்.

தாய்லாந்து மற்றும் ஜப்பான் பயணம்

கடந்த ஆண்டின் இறுதியில் தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் தான் மேற்கொண்ட பயணத்தைக் குறித்து நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு கலாச்சாரங்களின் சந்திப்புக்கள் தனக்கு நம்பிக்கை தருவதாகக் கூறினார்.

அத்துடன், அணு ஆயுதமற்ற உலகம் சாத்தியம் என்பதை, ஜப்பான் நாட்டுப் பயணம் தன் உள்ளத்தில் ஆழமாகப் பதித்தது என்பதை குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, 2020ம் ஆண்டு ஏப்ரல், மற்றும் மே மாதங்களில் அணு ஆயுத குறைப்பு பற்றி நியூ யார்க் நகரில் இடம்பெறவிருக்கும் முக்கியமான கூட்டத்தைப் பற்றியும் நினைவுறுத்தினார்.

ஆஸ்திரேலிய மக்களுடன்...

தான் இதுவரை பயணம் மேற்கொள்ளாத ஆஸ்திரேலியா நாடு தற்போது தன் நினைவுகளில் பெரிதும் உள்ளது என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, அந்நாட்டு மக்களுடன் தான் செபத்தில் ஒன்றித்திருப்பதாக உறுதியளித்தார்.

தன் உரையின் இறுதிப் பகுதியில், ஐ.நா. அவை உருவாக்கப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவு 2020ம் ஆண்டு சிறப்பிக்கப்படுவதைக் குறித்து பேசியத் திருத்தந்தை, இந்த அவையின் நான்கு குறிக்கோள்களான, அமைதி, நீதி, மனித மாண்பு மற்றும் மனிதாபிமான உதவிகள் ஆகிய இலக்குகளை அடைய அனைவரும் இணைந்து, முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று விண்ணப்பித்தார்.

கூடியிருந்த அனைத்து தூதர்களையும், அவர்கள் குடும்பத்தையும், இறைவன் பாதுக்காக்க வேண்டும் என்றும், அன்னை மரியா அவர்களை அரவணைக்க வேண்டும் என்றும் கூறியத் திருத்தந்தை, அனைவருக்கும், நம்பிக்கை நிறைந்த ஆசீரை வழங்குவதாகக் கூறி தன் உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 January 2020, 15:36