அன்னை மரியிடம் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அன்னை மரியிடம் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

அண்டார்டிகா விமானம் குறித்து திருத்தந்தையின் அனுதாபம்

சிலே நாட்டு இராணுவ விமானம் காணாமல்போன நிகழ்வினால் பாதிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களின் குடும்பத்தினர் அனைவரோடும், சிலே நாட்டு மக்கள் அனைவரோடும் திருத்தந்தை தன் ஆன்மீக அருகாமையை வெளிப்படுத்துகிறார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அண்டார்டிகா பகுதியை நோக்கிச் சென்ற சிலே நாட்டு இராணுவ விமானம் தகவல் தொடர்புகள் இன்றி மறைந்தது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அனுதாபத்தை தெரிவித்து, தந்திச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

சிலே நாட்டு இராணுவத்தின் ஆன்மீக வழிகாட்டியாகப் பணியாற்றும் ஆயர் Santiago Jaime Silva Retamales அவர்களுக்கு திருத்தந்தையின் சார்பாக, இத்தந்திச் செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.

துயரம் நிறைந்த இவ்வேளையில், இந்த நிகழ்வினால் பாதிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களின் குடும்பத்தினர் அனைவரோடும், சிலே நாட்டு மக்கள் அனைவரோடும் திருத்தந்தை தன் ஆன்மீக அருகாமையை வெளிப்படுத்துகிறார் என்று இத்தந்திச் செய்தி கூறுகிறது.

காணாமற்போன விமானத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருப்போர் அனைவருக்காகவும் தான் செபிப்பதாகவும், திருத்தந்தை உறுதி அளித்துள்ளார்.

டிசம்பர் 10, இச்செவ்வாயன்று, 17 விமானப் பணியாளர்களுடனும், 21 பயணிகளுடனும் அண்டார்டிகாவுக்குப் புறப்பட்ட சிலே நாட்டு விமானம், சிலே நாட்டிலிருந்து, 725 கி.மீ. தூரத்தில், தொடர்புகள் ஏதுமின்றி மறைந்தது. விமானத்தைத் தேடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 December 2019, 15:40