தேடுதல்

திருத்தந்தையுடன் Slovak பிரதமர் Peter Pellegrini. திருத்தந்தையுடன் Slovak பிரதமர் Peter Pellegrini.  

திருத்தந்தையுடன் சுலோவாக் பிரதமர் சந்திப்பு

இறைவனுக்கு வாழ்நாள் முழுவதும் ‘ஆம்’ என பதிலுரைக்க அன்னை மரியா அவர்கள் நமக்கு உதவுவாராக

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 9, இத்திங்களன்று காலை, திருப்பீடத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்து உரையாடினார், Slovak நாட்டு பிரதமர் Peter Pellegrini.

திருத்தந்தையுடன் இடம்பெற்ற சந்திப்புக்குப்பின், பிரதமர் பெல்லகிரீனி அவர்கள், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட வெளியுறவுத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகியோரையும் சந்தித்து உரையாடினார் என்று, வத்திக்கான் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

வத்திக்கானுக்கும் சுலோவாக் நாட்டிற்கும் இடையே நிலவிவரும் சுமூக உறவு, சுலோவாக் சமுதாயத்திற்கு, குறிப்பாக, கல்வித்துறையில் தலத்திருஅவையின் பங்களிப்பு, மத அமைப்புக்களுக்கு வழங்கப்படும் சட்ட ரீதியான பாதுகாப்பு, மத விடுதலை, அண்மையில் பிராத்திஸ்லாவா நகரில் இடம்பெற்ற OSCE கூட்டம் ஆகியவை குறித்து இச்சந்திப்பக்களில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

இதே திங்களன்று, தன் பணியை நிறைவுசெய்து நாடு திரும்பும், திருப்பீடத்திற்கான கிழக்கு திமோர் நாட்டின் தூதுவர்  Egas da Costa Freitas, ஐ.நா.வின் பல்வேறு கலாச்சாரங்கள் கூட்டமைப்பின் உயர் அதிகாரி Miguel Angel Moratinos ஆகியோரும் திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்தனர்.

மேலும், இஞ்ஞாயிறன்று, இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் முதல் டுவிட்டரில், ‘அமல உற்பவ அன்னை திருநாளன்று கத்தோலிக்க நடவடிக்கை குழுவில் (Catholic Action) தங்கள் நெருக்கத்தை புதுப்பிக்கின்றன, இத்தாலியப் பங்குத்தளங்கள். இக்குழுவின் பயிற்சி, பணி, மற்றும், சான்று வாழ்வை உள்ளடக்கிய நல்பயணம் தொடர வாழ்த்துக்கள்’, என எழுதியுள்ளார்.

இரண்டாவது டுவிட்டரில், இறைவனுக்கு வாழ்நாள் முழுவதும் ‘ஆம்’ என பதிலுரைக்க அன்னை மரியா அவர்கள் நமக்கு உதவுவாராக என எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 December 2019, 16:49