தேடுதல்

மாற்றுத் திறனாளி ஒருவருடன் திருத்தந்தை மாற்றுத் திறனாளி ஒருவருடன் திருத்தந்தை 

பாகுபடுத்தப்படுவது, ஒரு சமுதாயப் பாவம்

மாற்றுத்திறனாளிகளை, இரண்டாம்தரக் குடிமக்களாக நோக்கும் பார்வை மறைய, அனைவரின் மனநிலையில் மாற்றம் இடம்பெற வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு, மனிதத்தையும், மாண்பையும் உறுதிசெய்யும் உலகம் உருவாக்கப்படுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று வெளியிட்ட ஒரு செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

டிசம்பர் 03, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உலக நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மருத்துவ மற்றும், நலவாழ்வுத் துறைகளில் மாற்றுத்திறன்கொண்ட மக்களுக்கு ஆற்றப்படும் உதவிகளில் மிகுந்த முன்னேற்றம் காணப்படுகின்றது என்று பாராட்டியுள்ளார்.

அதேநேரம், பல மாற்றுத்திறனாளிகள், சமுதாயத்தில் பங்கேற்பு எதுவுமின்றி,  புறக்கணிப்பு கலாச்சாரத்தை எதிர்கொள்வதாக உணர்கின்றனர் என்று கூறியுள்ள திருத்தந்தை, மாற்றுத்திறனாளிகள் மற்றும், அவர்களின் குடும்பங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மட்டுமன்றி, முற்சார்பு எண்ணங்களை அகற்றி, இவ்வுலகை, மேலும் மனிதம் மிக்கதாய் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாகுபாட்டிற்கு எதிராகப் போராடுவதிலும், தரமான வாழ்வு மற்றும், சந்திப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதிலும், பங்கேற்பு உரிமையை வளர்ப்பது மைய இடத்தைக் கொண்டுள்ளது என்றும், திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளை, இரண்டாம்தரக் குடிமக்களாக நோக்கும் பார்வை மறைய, அனைவரின் மனநிலையில் மாற்றம் இடம்பெற வேண்டும் என்றும், இம்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் களையப்பட, நல்ல சட்டங்கள் தேவை என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

எல்லா மனிதருமே, பொது நலனுக்கு தங்களின் பங்கை அளிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, பாகுபடுத்தப்படுவது, ஒரு சமுதாயப் பாவம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும், தங்களின் கொடைகளை அவர்கள் சார்ந்துள்ள மற்றும், அவர்கள் பங்குகொள்ளும் குழுமத்தோடு பகிர்ந்துகொள்ளும்பொருட்டு, அவர்களுக்குப் பணியாற்றும் நம் அர்ப்பணத்தை, ஒன்றிணைந்து புதுப்பிப்போம்” என்ற சொற்களை, மாற்றுத்திறனாளிகள் உலக நாளை முன்னிட்டு, தன் டுவிட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2019, 15:02