தேடுதல்

Vatican News
லெஸ்போஸ் தீவில் வாழ்கின்ற புலம்பெயர்ந்தோரில் ஒரு பகுதி லெஸ்போஸ் தீவில் வாழ்கின்ற புலம்பெயர்ந்தோரில் ஒரு பகுதி  (AFP or licensors)

43 லெஸ்போஸ் புலம்பெயர்ந்தோரை வரவேற்கிறார் திருத்தந்தை

2016ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெஸ்போஸ் தீவுக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டதையடுத்து, புலம்பெயர்ந்தோர் சிலரை உரோம் நகருக்கு அழைத்துவரும் பணி துவங்கப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

லெஸ்போஸ் தீவில் வாழ்கின்ற புலம்பெயர்ந்தோரில் 33 பேரை, உரோம் நகருக்கு அழைத்து வருவதற்காக, திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski அவர்கள், டிசம்பர் 02, இத்திங்களன்று அத்தீவிற்குச் சென்றுள்ளார்.

கர்தினால் Krajewski அவர்கள், திருத்தந்தையின் பிரதிநிதியாக, டிசம்பர் 4, இப்புதன்கிழமையன்று அழைத்துவரும் 33 புலம்பெயர்ந்தோருக்கு, திருப்பீடமும், உரோம் புனித எஜிதியோ பிறரன்பு அமைப்பும், எல்லா உதவிகளையும் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெஸ்போஸ் தீவுக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டதையடுத்து, கடந்த மே மாதமும் புலம்பெயர்ந்தோர் குழு ஒன்று அழைத்துவரப்பட்டது, அதைத் தொடர்ந்து, இப்புதிய பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது.

கர்தினால் Krajewski அவர்களுடன், புனித எஜிதியோ பிறரன்பு அமைப்பின் சில பிரதிநிதிகளும், ஏஜியன் கடலிலுள்ள லெஸ்போஸ் தீவுக்குச் சென்றுள்ளனர்.

இந்த ஆண்டு இறுதிக்குள், மேலும் பத்து புலம்பெயர்ந்தோர் உரோம் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதிய மனிதாபிமானப் பாதைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

03 December 2019, 15:18