உரோம் "Pilo Albertelli" பள்ளியில் திருத்தந்தை உரோம் "Pilo Albertelli" பள்ளியில் திருத்தந்தை 

உரோம் "Pilo Albertelli" பள்ளி மாணவருடன் திருத்தந்தை

மத நம்பிக்கையற்றவர் மத்தியில், நற்செய்தி மற்றும், விசுவாசம் பற்றிய உணர்வைத் தட்டியெழுப்புவதற்கு, சாட்சிய வாழ்வு வாழ வேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உரோம் மேரி மேஜர் அன்னை மரியா பெருங்கோவிலுக்கு அருகிலுள்ள Pilo Albertelli அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, டிசம்பர் 20, இவ்வெள்ளி காலையில் தனது நீலநிற வாகனத்தில் சென்று, ஆசிரியர்கள் மற்றும், மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Pilo Albertelli பள்ளியின் முன்னாள் மறைக்கல்வி ஆசிரியரான, லொசர்வாத்தோரே ரொமானோ வத்திக்கான் நாளிதழின் இயக்குனர் Andrea Monda அவர்களுடனும், அப்பள்ளியின் தலைவருடனும் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஏறத்தாழ எண்ணூறு மாணவர்களும், ஆசிரியர்களும், மற்ற பணியாளர்களும் வரவேற்றனர்.

மாணவர்களின் பாடல்கள் மற்றும் தலைமையாசிரியரின் வரவேற்புரைக்குப் பின்னர், மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மோசமாக நடக்கும்போது, மிகக் கவலையான சூழலுக்கு இட்டுச்செல்லும் தனிமை, இலவசமாக வழங்கப்படும் அன்பு, மீள்சீர்செய்யப்பட வேண்டிய கடினமான பாதை, பொறுமை, சிறு தியாகங்கள் ஆகியவை பற்றிய தன் எண்ணங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும், மதங்கள் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, தனது அர்ஜென்டீனா நாட்டில் இடம்பெறும் புலம்பெயர்வு உட்பட, புலம்பெயர்வு பற்றிப் பேசியதோடு, அனைவருடனும் நல்லிணக்கத்துடன் வாழவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மத நம்பிக்கையற்றவர் பற்றிப் பேசுகையில், நற்செய்தி மற்றும், விசுவாசம் பற்றிய உணர்வைத் தட்டியெழுப்புவதில், சாட்சிய வாழ்வின் மதிப்பை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உண்மையான ஆசிரியரை அமைப்பது எது என்ற கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, ஆன்மாவிற்கு ஆக்சிஜனைக்கொணரும், விளையாட்டு மற்றும், கனவு காண்பது இளைஞர்களுக்கு முக்கியம் என்பதை வலியுறுத்தினார்.

அந்நேரத்தில், மணி அடித்தவுடன் இளைஞர்களுடன் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி மற்றும், பாதுகாப்பிற்கு, போரைப் பயன்படுத்தும் முரண்பாடான செயல் பற்றி, ஒரு மாணவர் கேட்ட கேள்விக்கு, இவ்வெள்ளி காலையில் திருப்பீடத்தில், ஐ.நா. பொதுச்செயலருடன் தான் வெளியிட்ட காணொளிச் செய்தி பற்றிக் குறிப்பிட்டார்.

Pilo Albertelli பள்ளியின் ஆசிரியர்களும், மாணவர்களும், 2018ம் ஆண்டு புனித வெள்ளியன்று திருத்தந்தை நிறைவேற்றிய சிலுவைப்பாதை சிந்தனைகளை எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 December 2019, 15:04