புனித பேதுரு வளாகத்தில் குடில் 251219 புனித பேதுரு வளாகத்தில் குடில் 251219 

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா - திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள

"குழந்தை இயேசு என்ற கொடையை நாம் பெற்றுக்கொண்டு, இயேசுவைப்போல் நாமும் ஒரு கொடையாக மாறுவோமாக. கொடையாக மாறுவதே, வாழ்வுக்குப் பொருள் தருகிறது" – கிறிஸ்மஸ் டுவிட்டர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய 'ஊர்பி எத் ஓர்பி' சிறப்புச் செய்தியுடன், இன்னும் இரு குறும் செய்திகளை இணைத்து, டிசம்பர் 25ம் தேதி, மூன்று டுவிட்டர் செய்திகள், @pontifex பக்கத்தில் வெளியாகியிருந்தன.

"கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவான இன்று, நற்கருணைப் பேழையைப்போல் விளங்கும் குடிலை நெருங்கி, ‘உமக்கு நன்றி’ என்று சொல்வதற்கு இது சரியான நாள். இயேசு என்ற கொடையை நாம் பெற்றுக்கொண்டு, இயேசுவைப்போல் நாமும் ஒரு கொடையாக மாறுவோமாக. கொடையாக மாறுவதே, வாழ்வுக்குப் பொருள் தருகிறது" என்ற சொற்களை, திருத்தந்தை, கிறிஸ்மஸ் நாளன்று, தன் முதல் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவன்று நண்பகலில், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தின் மேல் மாடத்திலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய 'ஊர்பி எத் ஓர்பி' சிறப்புச் செய்தி, அவரது இரண்டாவது டுவிட்டர் செய்தியாக வெளியானது.

இதைத் தொடர்ந்து, பிற்பகல் ஒருமணியளவில் திருத்தந்தை வெளியிட்ட மூன்றாவது டுவிட்டர் செய்தியில், "மனித குடும்பத்தில் துன்புறும் அனைவருக்கும், இம்மானுவேல், ஒளியைக் கொணர்வாராக. சுயநலத்தால், அடிக்கடி, கல்லாக இறுகிப்போகும் நம் உள்ளங்களை, அவர், அன்பின் வடிகால்களாக உருவாக்குவராக. மகிழ்வு நிறைந்த இந்நாளில், அவரது கனிவைப் பொழிந்து, இவ்வுலகின் இருளை ஒளிமயமாக்குவாராக" என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

டிசம்பர் 25, இப்புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,271 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 82 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 December 2019, 14:52