இத்தாலியின் திருத்தூது உடன்உழைப்பாளர் பெண்கள் குழுமம் இத்தாலியின் திருத்தூது உடன்உழைப்பாளர் பெண்கள் குழுமம் 

இறைமக்களுக்கு பேரார்வத்துடன் பணியாற்றுங்கள்

இத்தாலியின் திருத்தூது உடன்உழைப்பாளர் பெண்கள் குழுமத்தின் வரலாறும் தனித்துவமும் சிறப்புமிக்கது. இக்குழுமம், திருஅவையில் பெண்களின் இருப்பிற்கு சான்றாக உள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இத்தாலியின் மிலான் உயர்மறைமாவட்டம், பதுவா, த்ரேவிசோ மறைமாவட்டங்கள் ஆகியவற்றில், மறைப்பணிகளுக்கு உதவும், ஏறத்தாழ 120 பெண் பிரதிநிதிகளை, டிசம்பர் 14, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த பிரதிநிதிகளுக்கென தான் தயாரித்து வைத்திருந்த உரையை வழங்காமல், அந்நேரத்தில் மனதில் எழுந்த தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை.   

புனித 6ம் பவுல் (ஜான் பாப்பிஸ்ட் மொந்தினி) அவர்கள், மிலான் பேராயராகப் பணியாற்றியபோது உருவாக்கிய இந்த மறைமாவட்ட பெண்கள் மறைப்பணி அமைப்புக்கு, ‘உயிர்ப்பின் பெண்கள்’ என அவர் பெயர் சூட்டியதையும் குறிப்பிட்டு, இப்பெண்கள், மறைமாவட்ட அருள்பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தன் நன்றியையும் தெரிவித்தார்.

திருத்தந்தை, பேராயர் திகுவாத்ரோ சந்திப்பு

மேலும், இந்தியா மற்றும், நேபாளத்தில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றும் பேராயர் ஜாம்பத்திஸ்தா திகுவாத்ரோ அவர்களையும், Marco Bulgheroni அவர்களையும், அவரோடு சென்ற குழுவினரையும், டிசம்பர் 14, இச்சனிக்கிழமை காலையில் திருப்பீடத்தில் தனியே சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்ஜென்டீனாவில் பணியாற்றும் Marco Bulgheroni அவர்கள், அமெரிக்க மின்சக்தி குழுமத்தின் தலைவராவார். இக்குழுமம், மிகப்பெரிய எரிவாயு மற்றும், எண்ணெய் நிறுவனமாகும்.

டுவிட்டர் செய்திகள்

இன்னும், டிசம்பர் 14, இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில், “விசுவாசம், வாழ்வின் நிகழ்வுகளை நம்பிக்கையோடு நோக்குவதற்குரிய சக்தியைத் தருகின்றது, மேலும், தீமை ஒருபோதும் வெற்றியடையாது என்ற அறிவில், தோல்விகளையும், துன்பங்களையும் ஏற்றுக்கொள்வதற்கும் விசுவாசம் நமக்கு உதவுகின்றது” என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.

மேலும், தன் அருள்பணித்துவ பொன் விழாவுக்கு செபம் கலந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்த எல்லாருக்கும், டிசம்பர் 13, இவ்வெள்ளி மாலையில், தன் டுவிட்டர் செய்தியில் நன்றி சொல்லி எழுதியிருந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“இந்த ஆண்டு நிறைவு நாளில் என்னுடன் இருந்த உங்கள் எல்லாருக்கும் நன்றி. உங்கள் செப ஆதரவு தேவை என்பதை தொடர்ந்து நான் கேட்கிறேன்” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 December 2019, 15:07