திருத்தந்தை, மொந்தெநெக்ரோ பிரதமர் Marković  திருத்தந்தை, மொந்தெநெக்ரோ பிரதமர் Marković  

மொந்தெநெக்ரோ குடியரசு- திருத்தந்தைக்கு அழைப்பு

மொந்தெநெக்ரோ குடியரசின் தனித்துவத்தைக் குறித்துக் காட்டுவது, இனங்களுக்கிடையே மற்றும், மதங்களுக்கிடையே நல்லிணக்கம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மொந்தெநெக்ரோ குடியரசின் பிரதமர் Duško Marković  அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, டிசம்பர் 14, இச்சனிக்கிழமை காலையில் திருப்பீடத்தின் நூலக அறையில் ஏறத்தாழ 35 நிமிடங்கள் தனியே சந்தித்து கலந்துரையாடினார்.

பரிசுப் பொருள்கள்

மொந்தெநெக்ரோ அரசின் ஐந்து பிரதிநிதிகள் குழுவுடன் திருப்பீடம் சென்ற பிரதமர் Marković அவர்கள், செபமாலைகள் நிறைந்த ஒரு பெட்டியையும், ‘உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்ற பொருளில், மொந்தெநெக்ரோ மரபில் தயாரிக்கப்பட்ட அழகிய வண்ணப்படம் ஒன்றையும், திருத்தந்தைக்கு அன்பளிப்பாக அளித்தார்.   

திருத்தந்தையும், அமைதி பதக்கம் ஒன்றையும், ‘நற்செய்தியின் மகிழ்வு (Evangelii gaudium)’, ‘அன்பின் மகிழ்வு (Amoris Laetitia)’, ‘இறைவா உமக்கே புகழ் (Laudato si')’, ‘அகமகிழ்ந்து களிகூருங்கள் (Gaudete et exsultate)’, ‘கிறிஸ்து வாழ்கிறார் (Christus vivit)’ ஆகிய தனது ஐந்து திருமடல்கள் மற்றும், திருத்தூது அறிவுரை தொகுப்புக்களையும், அபுதாபியில் கடந்த பிப்ரவரியில், Al-Azhar இஸ்லாம் பெரிய குருவுடன் கையெழுத்திட்ட, மனித உடன்பிறந்தநிலை என்ற ஏட்டையும், 2020ம் ஆண்டின் உலக அமைதி நாள் செய்தியையும், மொந்தெநெக்ரோ பிரதமருக்கு அன்பளிப்பாக அளித்தார்.

திருத்தந்தையிடமிருந்து விடைபெற்றுச் சென்றபோது, மொந்தெநெக்ரோவில் சந்திப்போம் என நம்புகிறேன் என்று, Marković  அவர்கள் திருத்தந்தையிடம் கூறியவுடன், திருத்தந்தையின் உடனடிப் பதிலும் சரி என்பதுபோல் இருந்ததெனச் சொல்லப்படுகிறது. 

திருப்பீட அதிகாரிகள் சந்திப்பு

பிரதமர் Marković  அவர்கள் திருத்தந்தையை சந்தித்துப் பேசிய பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகளின் திருப்பீட செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

மொந்தெநெக்ரோ குடியரசிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் தொடர்ந்து நீடிக்கும் என்ற நம்பிக்கை, இச்சந்திப்புகளில் வெளிப்படுத்தப்பட்டன என்று, திருப்பீட செய்தி தொடர்பகம் கூறியது.

மேலும், ஆண்டாண்டு காலமாக, மொந்தெநெக்ரோவின் தனித்துவத்தைக் குறித்துக் காட்டும் இனங்களுக்கிடையே மற்றும், மதங்களுக்கிடையே நல்லிணக்கம் வளர வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது. ஐரோப்பாவின் வருங்காலம், தற்போது மதங்கள் எதிர்கொள்ளும் சவால்கள், புலம்பெயர்வு விவகாரம் போன்ற உலகலாவிய தலைப்புகளும், இச்சந்திப்புகளில் இடம்பெற்றன என்றும், திருப்பீட செய்தி தொடர்பகம் கூறியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 December 2019, 15:15