தேடுதல்

Vatican News
Mogadishu நகரில் தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் இறந்தோரை அப்புறப்படுத்தும் பணியாளர்கள் Mogadishu நகரில் தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் இறந்தோரை அப்புறப்படுத்தும் பணியாளர்கள் 

வன்முறைக்கு பலியானோருக்காக அனைவரும் செபிக்க அழைப்பு

Mogadishu நகரில் தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் உயிரிழந்துள்ளோர் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சொமாலியாவின் Mogadishu நகரில், இச்சனிக்கிழமையன்று நிகழ்ந்த, தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஏறத்தாழ 90 பேர் உயிரிழந்துள்ளது குறித்து, தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் சொமாலியா தாக்குதல் குறித்து தன் கவலையை வெளியிட்ட திருத்தந்தை, இந்த தீவிரவாத தாங்குதலுக்கு பலியானோர், மற்றும், காயமடைந்தோருடன் தான் செபத்தால் ஒன்றித்திருப்பதாகக் கூறினார்.

இறந்தோர், மற்றும், காயமுற்றோரின் குடும்ப அங்கத்தினர்களுடன் தான் மிக நெருக்கமாக இருப்பதாக உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பலியானோர், மற்றும், பாதிக்கப்பட்டோருக்காக அனைவரும் செபிக்குமாறு அழைப்புவிடுத்து, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த அனைவரோடும் இணைந்து, 'அருள்நிறை மரியே' என்ற செபத்தை செபித்தார்.

சொமாலியாவின் தென்பகுதியை, தலைநகர் Mogadishuவுடன் இணைக்கும் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியின் மீது, வெடிகுண்டு ஏற்றிய காரைக் கொண்டு மோதியதில், இதுவரை 90 பேர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இச்சனிக்கிழமையன்று காலையில் இடம்பெற்ற இத்தாக்குதலில், பல்கலைக்கழக மாணவர்களும், இராணுவ வீரர்களும், பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர்.

29 December 2019, 12:40