வத்திக்கான் பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கான் பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் 

42வது ஐரோப்பிய இளைஞர் கூட்டத்திற்கு செய்தி

கிறிஸ்தவ நம்பிக்கையை கைவிட்டுவிட சோதனைகள் எழுந்தபோதும், கிறிஸ்துவுக்கு விசுவாசமாக இருந்த போலந்து மக்களிடமிருந்து இளைஞர்கள் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 28, இச்சனிக்கிழமை முதல், சனவரி 1, வருகிற புதன் வரை, போலந்து நாட்டின் Wrocław நகரில், Taizé கிறிஸ்தவ ஒன்றிப்பு குழு, ஐரோப்பிய இளைஞர்களுக்கு நடத்தும் 42வது கூட்டத்திற்குச் செய்தி அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் தாயகமான போலந்தில் கூடியிருக்கும் இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும், போலந்து கிறிஸ்தவர்களோடு தொடர்புகொண்டு உங்கள் விசுவாசத்தை ஆழப்படுத்த வேண்டுமென்று செபிக்கின்றேன் மற்றும், உங்களை ஊக்கப்படுத்துகிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

‘தொடர்ந்து பயணம் மேற்கொள்ளுங்கள், வேரோடு பிடுங்கி எறியப்பட ஒருபோதும் அனுமதியாதீர்கள்’ என்ற இக்கூட்டத்தின் இலக்கை மையப்படுத்தி தன் செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை, போலந்து நாடு, கிறிஸ்தவ நம்பிக்கையில் அசைக்கப்பட்டபோது, விசுவாசத்தில் வேரூன்றியிருந்ததால், பெரும் துன்பங்கள் மத்தியில் உறுதியாக இருந்துள்ளது என்று எடுத்துரைத்துள்ளார்.

கிறிஸ்தவ நம்பிக்கையை கைவிட்டுவிட சோதனைகள் எழுந்தபோதும், கிறிஸ்துவுக்கு விசுவாசமாக இருந்த போலந்து மக்களிடமிருந்து இளைஞர்களாகிய நீங்கள், கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கின்றன என்று கூறியுள்ள திருத்தந்தை, போலந்து கிறிஸ்தவர்கள், மற்றுமோர் வருங்காலத்தை துணிச்சலுடன் நம்பியவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மற்றவர்களோடு சேர்ந்து பயணம் மேற்கொள்கையில், அதைத் தொடர்வதில் நிறைய மகிழ்ச்சி உள்ளது என்பதைக் கண்டுணர்வீர்கள் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் இளைஞர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும், டேஜே குழுமத்தினருக்கு தன் ஆசீரையும் வழங்கியுள்ளார்.

திருத்தந்தையின் பெயரில், திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

கிறிஸ்தவ விசுவாசம் மற்றும் புரிந்துணர்வை ஆழப்படுத்தவும், குடும்பங்களின் உபசரிப்பை அனுபவித்து, அந்த அனுபவத்தை, எளிமையில் மற்றவருடன் பகிர்ந்துகொள்ளவும், இக்கால சவால்கள் மத்தியில் நற்செய்தியை வாழ்கின்ற மக்களைச் சந்திக்கவும், ஐரோப்பாவில் தோழமையுணர்விற்குப் புதிய தூண்டுதலைக் கண்டுணரவும் இக்கூட்டத்தில் இளைஞர்கள் அழைப்பு பெறுகின்றனர் என்று, டேஜே குழுமம் கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 December 2019, 15:27