தேடுதல்

Vatican News
புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை 041219  புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை 041219   (Vatican Media)

மறைக்கல்வியுரை: மந்தை முழுவதையும் காத்துக்கொள்ளுங்கள்

கிறிஸ்தவ சமுதாயம் நற்செய்தி மீது கொண்ட மகிழ்ச்சிநிறை விசுவாசத்தில் வளர்வதற்கு உதவும் வகையில், திருஅவை மேய்ப்பர்கள் செயல்பட செபிப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தூதர் பணிகள் நூலில் காணப்படும் துவக்ககால கிறிஸ்தவ நடவடிக்கைகள் குறித்து புதன் மறைக்கல்விகளில் ஒரு தொடராக வழங்கி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த வாரம், தன் திருத்தூதுப்பயணம் குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார். இவ்வாரம், திருத்தூதர் பணிகள் குறித்த தன் மறைக்கல்வியின் தொடர்சசியாக, எபேசுவில்  நற்செய்தி அறிவிக்கப்பட்டது குறித்து, உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள் (தி.ப. 20,28). என்ற தலைப்பில் உரை வழங்கினார்.

முதலில், திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து ஒரு பகுதி பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது.

இப்போதும் நான் உங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கிறேன்; அவரது அருள் வார்த்தைக்கும் கட்டுப்படுவீர்களாக! […]. என்னுடைய தேவைகளுக்காகவும் என்னோடிருந்தவர்களுடைய தேவைகளுக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். இவ்வாறு பாடுபட்டு உழைத்து நலிவுற்றோர்க்குத் துணை நிற்க வேண்டுமென்று அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டினேன். அதோடு, பெற்றுக் கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவு கூருங்கள் என்றும் கூறினேன்.” (தி.ப. 20, 32-35)

திருத்தூதர் பணிகள் நூலில் காணப்படும் நடவடிக்கைகள் குறித்த மறைக்கல்வியின் தொடர்ச்சியாக, இன்று, எபேசுவில்  நற்செய்தி அறிவிக்கப்பட்டது குறித்து நோக்குவோம். எபேசுவில் புனித பவுல் நோயாளிகளைக் குணப்படுத்தல், தீய ஆவி பிடித்திருந்தோருக்கு அதிலிருந்து விடுதலை அளித்தல், என பல அற்புதங்களை நிகழ்த்தினார். மாயவித்தைகள் அதிகம் பரவியிருந்த இந்நகரில் புனித பவுல், இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தினால் கொணரப்பட்ட மீட்பு குறித்து போதித்தார். எருசலேம் செல்வதற்கென அவர் திரும்பிவரும் வழியில், மிலேத்து நகரில் தன் பயணத்தை நிறுத்தி, எபேசு மூப்பர்களை அழைத்து வரச்செய்கிறார். தான் அங்கிருந்து சென்றபின் கிறிஸ்தவ சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் பொறுப்பிலுள்ள மூப்பர்களுக்கு ஊக்கமளிக்கிறார். தவறான கொள்கைகளைப் போதிப்பவர்களிடம் இருந்து காத்துக்கொள்ளும்படியாகவும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையை புனிதத்துவத்தின் பாதையில் வழிநடத்தும்படியாகவும், ஏழைகள் மீது அக்கறை காட்டி அவர்களை தாராள மனதுடன் நடத்துமாறும் மூப்பர்களிடம் அழைப்புவிடுத்தார் புனித பவுல். அன்பு நண்பர்களே, கிறிஸ்தவ சமுதாயம் நற்செய்தி மீது கொண்ட மகிழ்ச்சிநிறை விசுவாசத்தில் வளர்வதற்கு உதவும் வகையில், எல்லாக் காலத்திலும் திருஅவை மேய்ப்பர்கள் ஆழமான விசுவாசத்தில் பெரும் ஆர்வத்திலும் தொடர்ந்து நிலைத்திருக்க இறைவன் அருள் வழங்க வேண்டும் என, நாம் அனைவரும் செபிப்போம். இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

04 December 2019, 13:11