தேடுதல்

Vatican News
உக்ரைன் நாட்டில், பைசாந்திய வழிபாட்டுமுறையைப் பின்பற்றும் Mukachevo மறைமாவட்ட பிரதிநிதிகளுடன் திருத்தந்தை உக்ரைன் நாட்டில், பைசாந்திய வழிபாட்டுமுறையைப் பின்பற்றும் Mukachevo மறைமாவட்ட பிரதிநிதிகளுடன் திருத்தந்தை  (Vatican Media)

உக்ரைன் நாட்டு திருப்பயணிகளுக்கு திருத்தந்தையின் ஆசீர்

Mukachevo பைசாந்திய வழிபாட்டுமுறை தலத்திருஅவையின் வரலாறு, பல மறைசாட்சிகளின் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உக்ரைன் நாட்டில், பைசாந்திய (Byzantine) வழிபாட்டுமுறையைப் பின்பற்றும் Mukachevo மறைமாவட்டத்திலிருந்து, வத்திக்கானுக்கு வந்திருந்த திருப்பயணிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 11, இப்புதன் காலையில் சந்தித்து வாழ்த்தினார்.

புனித பேதுரு பெருங்கோவிலில் கூடியிருந்த உக்ரைன் மக்களை, தன் புதன் பொது மறைக்கல்வி உரையை வழங்குவதற்கு முன்னர், சந்தித்த திருத்தந்தை, Mukachevo தலத்திருஅவையின் வரலாறு, பல மறைசாட்சிகளின் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது என்று கூறினார்.

Mukachevo தலத்திருஅவையின் இருள் சூழ்ந்த கடினமான காலக்கட்டத்தில், ஆயராகப் பணியாற்றிய அருளாளர் Teodor Romža அவர்கள், தன் மக்களுக்காக உயிரை வழங்குமளவு, அவர்களை துணிவுடன் வழிநடத்தினார் என்பதை, திருத்தந்தை தன் வாழ்த்துரையில் சுட்டிக்காட்டினார்.

சோவியத் அடக்குமுறையிலிருந்து வெளியேறிய 30ம் ஆண்டை சிறப்பிக்க, Mukachevo தலத்திருஅவையின் விசுவாசிகள், புனித பேதுரு கல்லறையை நாடி வந்திருப்பது, அம்மக்களின் பக்தியையும், அவர்கள் அனைவரும், புனித பேதுருவின் வழித்தோன்றல்கள் என்பதையும் தனக்கு உணர்த்துகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பயணிகளிடம் கூறினார்.

கிறிஸ்து பிறப்பு பெருவிழா நெருங்கிவரும் வேளையில், வத்திக்கானுக்கு வருகை தந்துள்ள Mukachevo தலத்திருஅவையின் திருப்பயணிகள் வழியே, அப்பகுதியில் வாழும் அனைவருக்கும் தன் ஆசீரை வழங்குவதாகவும், குறிப்பாக, வயதில் முதிர்ந்து, உடல் நலம் குன்றி வாழ்வோருக்கு சிறப்பு ஆசீரை வழங்குவதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறி, அங்கிருந்தோர் அனைவருக்கும் ஆசீர் வழங்கினார்.

11 December 2019, 15:18