தேடுதல்

Vatican News
ஐ.நா. அவையின் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் ஐ.நா. அவையின் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ்   (Vatican Media)

மனிதாபிமானம் நிறைந்த தூதராக விளங்கும் திருத்தந்தை

உலகில் மிகவும் நலிந்தவர்கள் சார்பாகப் பேசும் ஆன்மீகக் குரலாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விளங்குகிறார் - ஐ.நா. அவையின் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மனித துயரங்களைக் குறைத்து, மனித மாண்பை உயர்த்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கையும் மனிதாபிமானமும் நிறைந்த ஒரு தூதராக விளங்குகிறார் என்று ஐ.நா. அவையின் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஐ.நா. பொதுச்செயலரும், டிசம்பர் 20, இவ்வெள்ளியன்று, வத்திக்கானில் சந்தித்த வேளையில், கூட்டேரஸ் அவர்கள் திருத்தந்தையை வாழ்த்திப் பேசியபோது இவ்வாறு கூறினார்.

உலகில் மிகவும் நலிந்தவர்கள் சார்பாக, குறிப்பாக, புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் சார்பாகவும், வறுமையாலும், சமுதாய ஏற்றத்தாழ்வுகளாலும் பாதிக்கப்போட்டோர் சார்பாகவும் பேசும் ஆன்மீகக் குரலாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விளங்குகிறார் என்று கூட்டேரஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

பூமிக்கோளம், மற்றும் சுற்றுச்சூழலுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை, உலகறியச் செய்யும் வகையில், 'இறைவா உமக்கே புகழ்' என்ற சுற்றுமடலை திருத்தந்தை வெளியிட்டதற்காக கூட்டேரஸ் அவர்கள், பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

மத்ரித் நகரில் நடைபெற்ற COP 25 மாநாடு முடிவுற்ற நிலையில், உரோம் நகருக்கு வருகை தந்துள்ள தான், 2050ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியீட்டை முற்றிலும் குறைப்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களோடு இணைந்து, உலகத் தலைவர்களிடம் விண்ணப்பிப்பதாக, ஐ.நா.அவை பொதுச்செயலர் கூறினார்.

20 December 2019, 16:10