தேடுதல்

Vatican News
பிலிப்பீன்சில் சூறாவளியால் பாதிக்கப்பட்டோர் பிலிப்பீன்சில் சூறாவளியால் பாதிக்கப்பட்டோர்  (AFP or licensors)

பிலிப்பீன்ஸ் சூறாவளியால் பாதிக்கப்பட்டோருக்கு செபங்கள்

பிலிப்பீன்ஸ் நாட்டைத் தாக்கியுள்ள Phanfone சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளோரின் துயரங்களோடு தான் இணைவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 26, இவ்வியாழனன்று வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டைத் தாக்கியுள்ள Phanfone சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளோரின் துயரங்களோடு தான் இணைவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 26, இவ்வியாழனன்று வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார்.

இந்தச் சூறாவளியால் இறந்தோர், காயமுற்றோர், மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்காகவும் தான் செபிப்பதாகக் கூறியத் திருத்தந்தை, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த அனைவரோடும் இணைந்து, 'அருள்நிறை மரியே' செபத்தைச் சொன்னார்.

மேலும், கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவையொட்டி, உரோம் நகரிலிருந்தும், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தனக்கு அனுப்பப்பட்ட வாழ்த்துக்களுக்காக நன்றி கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும், தன்னால், தனிப்பட்ட முறையில் பதில் அளிக்க இயலாது என்றும், அவர்கள் அனைவருக்காகவும் தான் செபிப்பதாகவும் தெரிவித்தார்.

வாழ்த்துக்களுடன், தங்கள் செபங்களை தனக்காக எழுப்பியுள்ள உள்ளங்களுக்கு, தன் சிறப்பான நன்றி என்று கூறிய திருத்தந்தை, மீண்டும் ஒருமுறை, அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா காலத்தின் மகிழ்வைப் பகிர்ந்துகொள்வதாகக் கூறினார்.

டிசம்பர் 24, இச்செவ்வாய் இரவு முதல், பிலிப்பின்ஸ் நாட்டைத் தாக்கிய Phanfone சூறாவளியால் இதுவரை, 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 58,000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

26 December 2019, 12:30