Vatican News
டிசம்பர் 25, கிறிஸ்து பிறப்பு நாளன்று, நண்பகல் 12 மணிக்கு,  ‘ஊர்பி எத் ஓர்பி’ (Urbi et Orbi) செய்தியை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் டிசம்பர் 25, கிறிஸ்து பிறப்பு நாளன்று, நண்பகல் 12 மணிக்கு, ‘ஊர்பி எத் ஓர்பி’ (Urbi et Orbi) செய்தியை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

திருத்தந்தையின் ‘ஊர்பி எத் ஓர்பி’கிறிஸ்மஸ் செய்தி

மனித இதயங்களில் இருள் குடிகொண்டுள்ளது. தனிப்பட்ட, குடும்ப, சமூக உறவுகளில் இருள் சூழ்ந்துள்ளது, இருப்பினும் இறைவனின் ஒளி பெரிது – திருத்தந்தையின் ‘ஊர்பி எத் ஓர்பி’ செய்தி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் நள்ளிரவுத் திருப்பலியை நிறைவேற்றி அங்கு குழுமியிருந்த மக்களுக்கு வாழ்த்துக்களையும் வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 25, கிறிஸ்து பிறப்பு நாளன்று, நண்பகல் 12 மணிக்கு, ஊருக்கும் உலகுக்கும், அதாவது, உரோம் நகருக்கும் உலகுக்கும் என்ற பொருள்படும் ‘ஊர்பி எத் ஓர்பி’ (Urbi et Orbi) செய்தியை வழங்க வந்தார். ஒவ்வோர் ஆண்டும், ‘ஊர்பி எத் ஓர்பி’ செய்தியும், சிறப்பு ஆசீரும், இருமுறை, அதாவது, கிறிஸ்து பிறப்பு, மற்றும், ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா நாட்களில் வழங்கப்படுகின்றன. டிசம்பர் 25, இப்புதனன்று, கர்தினால்கள் இரஃபேலே மர்த்தினோ, மற்றும், கொன்ராடு க்ரெயேவிஸ்கி ஆகியோருடன் புனித பேதுரு பசிலிக்கா மேல்மாடத்தில் தோன்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு நாடுகளில் துன்புறும் மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு இறைவன் தன் ஒளியை கொணர்வாராக என்ற இறைவேண்டலை, நம்பிக்கையை மையமாக வைத்து, தன் உரையை வழங்கினார்.

“காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்” (ஏசாயா  9:1)

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!

மனுவுருவெடுத்த இறைமகன், தாய்திருஅவையின் கருவறையிலிருந்து, இன்றிரவு, மீண்டும் புதிதாகப் பிறந்துள்ளார். அவர் பெயர் இயேசு, அதாவது, 'கடவுள் மீட்கிறார்' என்பதே அதன் பொருள். என்றென்றும் நிலைத்திருக்கும், மற்றும், முடிவற்ற அன்பாய் இருக்கும் தந்தையாம் இறைவன், தன் மகனை இவ்வுலகிற்கு அனுப்பியது அதனை தீர்ப்பிட அல்ல, மாறாக, அதனை மீட்கவே  (யோவா 3:17). தந்தை தன் மகனை அளவற்ற கருணையுடன் நமக்கு வழங்கியுள்ளார். அவர் அனைவருக்காகவும் தன்னையே வழங்கியுள்ளார். காலவரையறையின்றி நமக்கு வழங்கியுள்ளார். குளிர் நிறைந்த இரவின் இருளில், ஒளிர்விடும் சிறு விளக்குப்போல், இறைமகன் பிறந்துள்ளார்.

கன்னி மரியாவிடம் பிறந்த அந்த குழந்தையே, மனுவுரு எடுத்த இறைவார்த்தையாகும். ஆபிரகாமின் இதயத்தை வழிநடத்திய, வாக்களிக்கப்பட்ட நிலம் நோக்கி மக்களை வழி நடத்திச் சென்ற, தன் வாக்குறுதியில் நம்பிக்கைக் கொண்ட அனைவரையும் தன்பால் கவர்ந்து, தொடர்ந்து இணைத்து வரும் வார்த்தை அவர். எபிரேயர்களை அடிமைத்தளையிலிருந்து விடுதலை நோக்கி வழிநடத்திச் சென்ற இந்த வார்த்தையானவர், நம் காலத்தையும் உட்படுத்திய அனைத்துக் காலங்களிலும், மக்களை, சிறைகளிலிருந்து வெளிவருமாறு அழைப்பு விடுக்கிறார். கதிரவனைவிடவும் ஒளிவீசும் இந்த வார்த்தை, தன்னையே சிறியதாக்கி மனுவுருவெடுத்தார். அவரே உலகின் ஒளியாம் இயேசு.

இதனால்தான் உரத்த குரலில் இறைவாக்கினர், “காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்” (ஏசாயா  9:1) என்கிறார். மனித இதயங்களில் இருள் குடிகொண்டுள்ளது, இருப்பினும், கிறிஸ்துவின் ஒளி மிகப் பெரிது. தனிப்பட்ட, குடும்ப, சமூக உறவுகளில் இருள் சூழ்ந்துள்ளது, இருப்பினும், இறைவனின் ஒளி பெரிது. பொருளாதார, அரசியல், மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் இருள் உள்ளது, இருப்பினும், இறைவனின் ஒளி அதைவிடப் பெரிது.

மத்தியக்கிழக்குப்பகுதியிலும் உலகின் பல பகுதிகளிலும் இடம்பெறும் மோதல்கள், மற்றும், போர்களினால் துன்புறும் எண்ணற்ற குழந்தைகள் மீது இயேசு கிறிஸ்து தன் ஒளியைக் கொண்டு வருவாராக. கடந்த பத்து ஆண்டுகளாக முடிவின்றி தொடர்ந்து கொண்டிருக்கும் மோதல்களால் துன்புறும் சிரியா நாட்டு மக்களுக்கு ஆறுதலை இறைவன் கொணர்வாராக. நல்மனத்தோரின் மனச்சான்றை அவர் தூண்டியெழுப்புவாராக. அப்பகுதியின் மக்கள், ஒன்றிணைந்து, அமைதியிலும், பாதுகாப்பிலும் வாழவும், அவர்களின் சொல்லொண்ணா துன்பங்கள் முடிவுக்கு வரவும், அனைத்துலக சமுதாயமும் அரசுகளும் தீர்வுகளைக் காண, இன்று இறைவன் தூண்டுவாராக. லெபனான் நாட்டு மக்கள் இணக்கமுடன் ஒன்றிணைந்து வாழவும், விடுதலையின் செய்தியை மீண்டும் கண்டுகொள்ளவும் இறைவன் அவர்களுக்கு உதவுவாராக.

மனுக்குலத்தின் மீட்பராக தான் பிறந்த புனித பூமிக்கு, ஆண்டவராம் இயேசு, ஒளியைக் கொணர்வாராக. இப்புனித பூமியில், மக்கள், துன்பங்களை எதிர்கொண்டாலும், மனம்தளராமல், அமைதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும், வளமான வாழ்வுக்காகவும், இன்னும் காத்திருக்கின்றனர். தற்போதைய பதட்ட நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக் நாட்டிற்கும், மிகப்பெரும் மனிதகுல நெருக்கடியால் துன்புறும் ஏமன் நாட்டிற்கும் இறைமகன் ஆறுதலைக் கொணர்வாராக.

பெத்லகேமின் இந்த சின்னஞ்சிறு குழந்தை, அமெரிக்க கண்டம் முழுமைக்கும் நம்பிக்கையைக் கொணர்வதாக. இக்கண்டத்தில் சமூக, மற்றும், அரசியல் கிளர்ச்சியை பல நாடுகள் சந்தித்து வருகின்றன. பல காலமாக அரசியல், மற்றும், பதட்ட நிலைகளை சந்தித்து வரும் அன்புநிறை வெனிசுவேலா நாட்டு மக்களுக்கு ஊக்கத்தையும், அவர்களுக்கு தேவைப்படும் உதவிகள் கிட்டுவதற்குரிய உறுதியையும் இறைக்குழந்தை வழங்குவதாக. ஒவ்வொரு மனிதரின் மாண்பையும் பாதிக்கும் ஏழ்மையின் அனைத்து வடிவங்களையும், பல்வேறு நெருக்கடிகளையும் வெற்றிகொள்வதற்கு உதவும் நோக்கத்தில் எடுக்கப்படும், ஒப்புரவு, மற்றும், நீதி தொடர்புடைய அனைத்து முயற்சிகளையும் இறைமகன் அசீர்வதிப்பாராக. நீடித்த, நிலைத்த, அமைதிக்குரிய உறுதியான தீர்வுகளுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் உக்ரைன் நாட்டிற்கு, இவ்வுலகின் மீட்பர் ஒளியைக் கொணர்வாராக.

புதிதாகப் பிறந்துள்ள ஆண்டவர், ஆப்ரிக்காவின் மக்களுக்கு ஒளியைக் கொணர்வாராக. இங்கு தொடர்ந்து கொண்டிருக்கும் சமூக, பொருளாதார நிலைகள், மக்கள் தங்கள் குடியிருப்புக்களையும் குடும்பங்களையும் விட்டு வேறு இடங்களுக்கு குடிபெயரும் நிலைக்குத் தள்ளுகின்றன. தொடர்ந்த மோதல்களால் பிளவுண்டு நிற்கும் காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்குப் பகுதியில் வாழும் மக்களுக்கு இறைமகன் அமைதியைக் கொணர்வாராக. வன்முறைகளாலும், இயற்கை பேரழிவுகளாலும், நோய்கள் பரவலாலும் துன்புறும் மக்கள் அனைவருக்கும் அவர் ஆறுதலைக் கொணர்வாராக.

தங்கள் மத நம்பிக்கைக்காக துன்புறுத்தப்படும் மக்கள், கடத்தப்பட்டுள்ள பொதுநிலை விசுவாசிகள், மறைப்பணியாளர்கள், குறிப்பாக புர்கினா ஃபாசோ, மாலி, நிஜர், நைஜீரியா ஆகிய நாடுகளில் மத நம்பிக்கைக்காக துன்புறும் மக்களுக்கு ஆறுதலைக் கொணர்வாராக.

இத்தகைய, மற்றும், வேறுவிதமான அநீதிகளாலும், பாதுகாப்பான வாழ்வு குறித்த நம்பிக்கையுடன் புலம்பெயரும் கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களுக்காக  வானிலிருந்து மண்ணகம் இறங்கி வந்துள்ள  இறைமகன், பாதுகாப்பையும் உறுதிப்பாட்டையும் வழங்குவாராக. இவர்களின் கல்லறைகளாக மாறும் கடலையும் பாலைவனத்தையும் கடக்கும் ஒரு நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளது அநீதியாகும். வெளியில் எடுத்துக்கூற முடியாத அளவு உரிமை மீறல்களுக்கும், அடிமைத்தனங்களுக்கும், சித்திரவதைகளுக்கும், தடுப்புக்காவல் முகாம்களில் அடைத்து வைப்பதற்கும் இவர்கள் உட்படுத்தப்படுவது அநீதியாகும். மாண்புடன் கூடிய வாழ்வு குறித்த நம்பிக்கையைக் கொண்டுள்ள இடங்களில் இவர்கள் நுழைய மறுக்கப்படுவதும், பாராமுகம் எனும் சுவரை இவர்கள் சந்திக்க வேண்டியிருப்பதும் அநீதியாகும்.

நம் மனித குடும்பத்தில் துன்புறும் அனைத்து அங்கத்தினர்களுக்கும் இம்மானுவேல் ஒளியைக் கொணர்வாராக. பெரும்பாலான நேரங்களில், இறுகிப்போயிருக்கும் நம் சுயநல இதயங்களை மிருதுவாக்கி, அவற்றை, தன் அன்பின் கருவிகளாக இறைமகன் மாற்றிடுவாராக. இவ்வுலகின் அனைத்துக் குழந்தைகளுக்கும், கைவிடப்பட்ட, மற்றும், வன்முறைகளால் துன்பங்களை அனுபவிக்கின்ற குழந்தைகளுக்கு, தன் புன்னகையை, நம் வறிய முகங்கள் வழியாக, இறைவன் கொணர்வாராக. நம் நலிவுற்ற கரங்கள் வழியாக, இறைவன், உடைகளற்ற மக்களைப் போர்த்தவும், பசித்திருப்போருக்கு உணவளிக்கவும், நோயுற்றிருப்போரை குணப்படுத்தவும் செய்வாராக. நம்முடைய நட்புறவின் வழியாக, இறைவன், முதியோருக்கும், தனிமையில் வாடுவோருக்கும், புலம்பெயர்ந்தோருக்கும், வாழ்வின் கடைநிலைக்குத் தள்ளப்பட்டோருக்கும், நெருக்கமாக வருவாராக. மகிழ்ச்சி நிறைந்த இந்த கிறிஸ்மஸ் நாளில், இறைமகன், தன் கனிவை அனைவருக்கும் கொணர்ந்து, இவ்வுலகின் இருளை ஒளிபெறச் செய்வாராக.

இவ்வாறு தன் ‘ஊர்பி எத் ஓர்பி’ வாழ்த்துச் செய்தியை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் ‘ஊர்பி எத் ஓர்பி’ சிறப்பு ஆசீரையும் வழங்கினார்.

25 December 2019, 12:10