தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் டிசம்பர் மாத செபக்கருத்தை தாங்கிவரும் 'The Pope Video' திருத்தந்தையின் டிசம்பர் மாத செபக்கருத்தை தாங்கிவரும் 'The Pope Video' 

குழந்தையின் அழுகுரல் இறைவனை நோக்கி எழுகிறது

டிசம்பர் மாதத்திற்குரிய தன் செபக்கருத்தை, "மிக மிக இளையோரின் எதிர்காலம்" என்ற மையக்கருத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 5, இவ்வியாழன் மாலையில் வெளியிட்டார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

குழந்தைகளின் எதிர்காலத்தை, குறிப்பாக, இன்று துன்புறும் குழந்தைகளின் எதிர்காலத்தை, ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டு, உலகின் ஒவ்வொரு நாடும், செயலாற்றுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

இயேசு சபையினரால் நடத்தப்படும், இறைவேண்டலின் திருத்தூது பணி அமைப்பு, ஒவ்வொரு மாதமும், திருத்தந்தையின் செபக்கருத்துக்களை 'The Pope Video' என்ற காணொளி வழியே வெளியிட்டு வருகிறது.

டிசம்பர் மாதத்திற்குரிய தன் செபக்கருத்தை, "மிக மிக இளையோரின் எதிர்காலம்" என்ற மையக்கருத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  டிசம்பர் 5, இவ்வியாழன் மாலையில் வெளியிட்டார்.

"கல்வியும், நலவாழ்வு பராமரிப்பும் தரப்படாமல், ஒதுக்கப்பட்ட, தவறாகப் பயன்படுத்தப்பட்ட, ஆதரவின்றி விடப்பட்ட ஒவ்வொரு குழந்தையின் அழுகுரலும் இறைவனை நோக்கி எழுகிறது. பாதுகாப்பு ஏதுமின்றி நம் உலகிற்கு வந்த கிறிஸ்து, அவர்கள் ஒவ்வொருவரிலும் இருக்கிறார்; அவர்கள் கண்கள் வழியே கிறிஸ்து நம்மை உற்றுநோக்குகிறார். ஒவ்வொரு நாடும், குழந்தைகளின் எதிர்காலத்தை, குறிப்பாக, இன்று துன்புறும் குழந்தைகளின் எதிர்காலத்தை, தங்கள் முதன்மையான நோக்கமாகக் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் செபிப்போமாக" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டிசம்பர் இறைவேண்டல் கருத்தாக வெளியாகியுள்ளன.

மேலும், இறைவேண்டலைக் குறித்து, திருத்தந்தை வெளியிட்டுள்ள ஒரு கருத்து, அவரது டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளியன்று வெளியாகியுள்ளது.

"இறைவேண்டல், நம்பிக்கையின் கதவாக விளங்குகிறது; இதயத்திற்கு மருந்தாகவும் உள்ளது" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

06 December 2019, 15:03