தேடுதல்

திரைப்படத்துறையினரைக் கொண்ட கத்தோலிக்க அமைப்பின் அங்கத்தினர்களுடன் திருத்தந்தை திரைப்படத்துறையினரைக் கொண்ட கத்தோலிக்க அமைப்பின் அங்கத்தினர்களுடன் திருத்தந்தை 

புதிய விடயங்கள் குறித்த கல்வியறிவிற்கு திரைப்படங்களின் உதவி

காட்டப்படும் பொருளையும் தாண்டி ஆழமாகச் சென்று உள் அர்த்தத்தை கண்டுகொள்ளவும், நம் மனச்சான்றை சோதனை செய்யவும் திரைப்படங்கள் உதவியுள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திரைப்படத்துறையினரைக் கொண்ட கத்தோலிக்க அமைப்பின் அங்கத்தினர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றிணைத்தல், படைப்பாற்றல், புதிய கண்ணோட்டம் என்ற மூன்று தலைப்புக்களில் அவர்களுக்கு உரையொன்று வழங்கினார்.

பல்வேறு குழுக்களை ஒன்றிணைத்துச் செயல்படும் திரைத்துறை, போருக்குப் பிந்தைய காலத்தில் சமூக கட்டுமானத்திற்கு பங்காற்றியுள்ளதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள் தங்கள் எதிர்பார்ப்புக்களை மாற்றியமைக்கவும், புதிய விடயங்கள் குறித்த கல்வியறிவு பெறவும் திரைப்படங்கள் உதவியுள்ளன என்பதை எடுத்துரைத்தார்.

கடந்த கால வரலாற்றை நம் கண்முன் கொணரவும் திரைப்படங்கள் உதவியுள்ளன என்று கூறியத் திருத்தந்தை, சமூகத்தில் இணைக்க வாழ்வை கட்டியெழுப்புவதில் திரைப்படங்கள் ஆற்றியுள்ள பணிகளைப் பாராட்டினார்.

இரண்டாவது தலைப்பான, படைப்பாற்றல் குறித்து பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவீன தொழில்நுட்ப துறைகள் முன்னற்றமடைந்துவரும் இக்காலக்கட்டத்தில், அதற்கேற்றார்போல் தங்கள் படைப்பாற்றலையும் திரைப்படத்துறையினர் வளர்த்துக் கொண்டுவருவதையும் பாராட்டினார்.

தங்கள் படைப்புக்கள் வெறும் அருங்காட்சியகமாக மாறுவதை விரும்பாத ஒவ்வொரு படைப்பாளியும், படைப்பாற்றலையும் கற்பனா சக்தியையும் அதிகம் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தினார்.

தன் உரையில் மூன்றாவது கருத்தாக, புதிய கண்ணோட்டம் என்பதை எடுத்துக் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திரைப்படங்களில் வரும் உணர்வுகளான, சிரிப்பு, கோபம், அச்சம், ஆர்வம் என்பவையெல்லாம் கண்ணுக்கு மட்டும் விருந்தாக தரப்படுவதல்ல, மாறாக, அதையும் தாண்டி உண்மை நிலைகளின் அடிப்படையில் தரப்படுபவை என்றார்.

காட்டப்படும் பொருளையும் தாண்டி ஆழமாகச் சென்று உள் அர்த்தத்தை கண்டுகொள்ளவும், நம் மனச்சான்றை சோதனை செய்யவும் திரைப்படங்கள் உதவியுள்ளன என்பதையும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இணக்க வாழ்வு, படைப்பாற்றல்,கவனமுடன் கூடிய நோக்கம் ஆகியவற்றில் திரைப்படத்துறையினர் நடைபோட, இறைவன் ஆசீர் வழங்குவாராக என கூறி, தன் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 December 2019, 16:18