தேடுதல்

Vatican News
மூவேளை செப உரை வழங்குகிரார், திருத்தந்தை பிரான்சிஸ் 011219 மூவேளை செப உரை வழங்குகிரார், திருத்தந்தை பிரான்சிஸ் 011219  (Vatican Media)

திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய மூவேளை செப உரை

வருங்காலத்தை மன உறுதியோடும், நம்பிக்கையோடும், எதிர்நோக்குடனும் உற்றுநோக்க இத்திருவருகைக் காலம் அழைக்கிறது – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று வழங்கப்பட்டுள்ள திருப்பலி வாசகங்கள், நம் இதயத்தில் ஒவ்வொரு நாளும் வரும் இறைமகன், இறுதி நாளில் மீண்டும் வருவார் என்பதை நினைவுறுத்துகின்றன என்று, தன் மூவேளை செப உரையைத் துவக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 1, இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, வருங்காலத்தை மன உறுதியோடும், நம்பிக்கையோடும், எதிர்நோக்குடனும் உற்றுநோக்க இத்திருவருகைக் காலம் அழைக்கிறது என்று கூறினார்.

நம் சுயநல போக்குகளால், உலகெங்கும், போர்களும், மோதல்களும் உருவாகி வரும் சூழலில், நீதியின் பேரில் நாம் கொள்ளும் பசித்தாகம், இறைவனில் மட்டுமே நிறைவடைவதைக் காணமுடியும் என்றும் கூறினார் திருத்தந்தை.

விழிப்பாயிருங்கள் என்று, இஞ்ஞாயிறு நற்செய்தியில் இயேசு விடுக்கும் அழைப்பு, கண்களைத் திறந்துவைத்திருப்பதைக் குறிப்பிடவில்லை, மாறாக, நம் அயலவரின் தேவைகளைக் குறித்து, நம் இதயங்களைத் திறந்து வைத்திருப்பதையும், நம் உள்ளங்கள் சரியானப் பாதையில் திரும்பவேண்டியதையும் குறிப்பிடுகின்றது என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

அடுத்தவரைப் பற்றிய அக்கறையின்மை,ஆடம்பரம், மனித உறவுகளை உருவாக்க இயலா நிலை, கைவிடப்பட்டோர், மற்றும், நோயாளிகள் குறித்து கவலையின்மை போன்ற உறக்கங்களிலிருந்து நாம் விழித்தெழவேண்டும் என்பதை இயேசு விரும்புகிறார் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மூவேளை செப உரையில் வலியுறுத்திக் கூறினார்.

02 December 2019, 15:30