தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ்  அவர்களின் மூவேளை செப உரை - 221219 திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மூவேளை செப உரை - 221219 

திருவருகைக் காலத்தின் முக்கிய நாயகர்களில் யோசேப்பு

புனித யோசேப்பு, கனிவோடும், பணிவோடும், ஒரு வார்த்தையும் பேசாமல், தன் வாழ்வால் நமக்கு பாடங்களைப் புகட்டுகிறார் – திருத்தந்தையின் மூவேளை செப உரை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கனிவும், மனத்தாழ்மையும் கொண்ட புனித யோசேப்பு, இறைவனின் குரலுக்கு எவ்விதம் செவிமடுக்கவேண்டும் என்பதையும், அவர் மீது எவ்விதம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதையும் நமக்குச் சொல்லித்தருகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு வழங்கிய மூவேளை செப உரையில் கூறினார்.

டிசம்பர் 22ம் தேதி, திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு சிறப்பிக்கப்பட்ட வேளையில், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு, இந்த ஞாயிறு திருப்பலியில் இடம்பெற்ற நற்செய்தி நிகழ்வை மையப்படுத்தி, தன் மூவேளை செப உரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருவருகைக் காலத்தின் முக்கிய நாயகர்கள்

மரியா, திருமுழுக்கு யோவான் மற்றும் யோசேப்பு ஆகியோரை, திருவருகைக் காலத்தின் முக்கிய நாயகர்களாக திருஅவை நமக்கு வழங்குகிறது என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, கிறிஸ்தவ ஞானத்தின் முழுமையை நாம் யோசேப்பில் கண்டுகொள்ளலாம் என்று வலியுறுத்திக் கூறினார்.

இந்த மூன்று நாயகர்களில், புனித யோசேப்பு, இயேசு வழங்கிய பேறுபெற்றோர் வரிசையில், கனிவோடும், பணிவோடும், ஒரு வார்த்தையும் பேசாமல், தன் வாழ்வால் நமக்கு பாடங்களைப் புகட்டுகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

புனித யோசேப்பு புகட்டும் பாடங்கள்

மரியா கருவுற்றிருக்கிறார் என்பதை அறியும் யோசேப்பு, அவசரமாகவும், தண்டிக்கும் மனதோடும் நடந்துகொள்ளாமல், அந்த இளம்பெண்ணுக்கு உரிய மாண்பை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவது, நமக்கெல்லாம் நல்லதொரு பாடம் என்று திருத்தந்தை கூறினார்.

நம்மை வியப்பில் ஆழ்த்துவதற்குக் காத்திருக்கும் இறைவனில் நம்பிக்கை கொள்வதற்கு, புனித யோசேப்பு நமக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறார் என்று தன் உரையின் இறுதியில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியா, மற்றும் புனித யோசேப்பின் உதவியோடு, இறைவனுக்கு செவிமடுக்கும் வரத்தை வேண்டுவோம் என்று, தன் மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 December 2019, 12:42