தேடுதல்

மூவேளை செப உரை 291219 மூவேளை செப உரை 291219 

இறை விருப்பத்திற்கு பதிலளிப்பதை விளக்கும் திருக்குடும்பம்

திருத்தந்தை : இறைத்திட்டத்தை கண்டுகொள்ளவும், அதனை நிறைவேற்றவும், திருக்குடும்பத்தின் அங்கத்தினர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் உதவினர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறை விருப்பத்திற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதை நமக்கு உணர்த்துகிறது நாசரேத்தின் திருக்குடும்பம், என்ற கருத்தை மையமாக வைத்து, இஞ்ஞாயிறு, தன்  மூவேளை செப உரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருக்குடும்ப திருவிழாவான இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு, திருத்தந்தை வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையில், இவ்வாறு கூறினார்.

இறைத்திட்டத்தைக் கண்டுகொள்ளவும்,  அதனை நிறைவேற்றவும், திருக்குடும்பத்தின் அங்கத்தினர்கள் மூவரும், எவ்வாறு, ஒருவருக்கொருவர் உதவினர் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இறைவிருப்பதை நிறைவேற்ற அவர்கள் மூவரும் எப்போதும் தயார் நிலையிலிருந்தனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மெசியாவின் தாயாக இருக்க அன்னை மரியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, எத்தகையத் தாழ்ச்சியுடன் அவர் அதனை ஏற்றுக்கொண்டார் என்பதை நாம் அறியும்போது, நமக்கு வியப்பு மேலிடுகிறது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதனையே இயேசு, 'இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவர் பேறுபெற்றவர்' என பாராட்டினார், என உரைத்தார்.

இறைவனின் செயல்பாடுகளை தன்னால் புரிந்துகொள்ளமுடியாதபோது, அவற்றை அமைதியாக தியானித்து வழிபட்டது மட்டுமல்ல, திருச்சிலுவையின் அடியில் நின்று, தான் எப்போதும் பிறருக்கு தன்னை கையளிக்க தயாராக இருப்பதையும், அன்னை மரியா வெளிப்படுத்தினார் என உரைத்தார், திருத்தந்தை.

விவிலியத்தில் புனித யோசேப்பு எதுவும் பேசவில்லையெனினும், கீழ்ப்படிந்து அதன்படி நடப்பவராக இருந்தார், எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித யோசேப்பு வழியாக, திருக்குடும்பத்தை, ஏரோதிடமிருந்து காப்பாற்றிய அதே தூய ஆவியானவர், இன்றும் அனைத்துக் குடும்பங்களுடன் தன் ஒருமைப்பாட்டை அறிவித்து, போராலும், வன்முறைகளாலும், அடக்குமுறைகளாலும் தங்கள் உறைவிடங்களைவிட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர கட்டாயப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களோடு ஒன்றித்திருக்கிறார் எனறு கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறுதியாக இயேசுவைக் குறித்து நாம் நோக்கும்போது, அவரே இறைவனின் விருப்பமாக இருந்தார், மற்றும், புனித பவுல் கூறுவதுபோல், அவரில் ஆம் என்பது மட்டுமே இருந்தது, இவ்வுலக வாழ்வில் அவர் தன் எல்லா நடவடிக்கைகளிலும் இறை விருப்பதிற்கு இயைந்தவராகவே செயல்பட்டார் எனவும் எடுத்துரைத்தார், திருத்தந்தை.

திருக்குடும்பத்தின் அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் இறைவிருப்பத்தை நிறைவேற்றுவதிலும், அதற்காக ஒருவருக்கொருவர் உதவுவதிலும் தங்களை ஈடுபடுத்தினர் என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய குடும்பங்கள் எவ்வாறு உள்ளன, சாப்பாட்டு மேசையில் ஒவ்வொருவரும் ஒரு கைப்பேசியை வைத்துக்கொண்டு, ஒருவருக்கொருவர் உரையாடலின்றி அமைதி காக்கிறார்களா என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 December 2019, 12:30