முதிய பணியாளர்களின் இத்தாலிய தேசிய இயக்கத்தினர் சந்திப்பு முதிய பணியாளர்களின் இத்தாலிய தேசிய இயக்கத்தினர் சந்திப்பு 

சமுதாயத்தில், முதியோர், ஒரு சுமையல்ல, மாறாக, வளம்

முதிய வயதிலும் மற்றவர்களுக்கு நம்மை அர்ப்பணித்து செயல்படும்போது, நம் தனிமை விரட்டப்படுவதுடன், மனதளவிலும் நாம் உறுதியுடன் இருக்க உதவுகின்றது - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சமுதாயத்தில், முதியோர், ஒரு சுமையாக நோக்கப்படாமல், ஒரு வளமாகவும் கொடையாகவும் நோக்கப்படவேண்டும் என அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

முதிய பணியாளர்களின் இத்தாலிய தேசிய இயக்கம் தன் 70ம் ஆண்டு நிறைவை சிறப்பிப்பதையொட்டி, தன்னைச் சந்திக்க வத்திக்கானுக்கு வந்திருந்த அவ்வியக்கத்தின் அங்கத்தினர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை, முதுமை என்பது, உரையாடல், மற்றும், கொடையின் காலம் என, அவ்வியக்கத்தின் தலைவர் எடுத்துரைத்ததை மையப்படுத்தி தன் உரையை வழங்கினார்.

பணியாற்றுபவருக்கும், பணிபெறுபவருக்கும், பலன்தரும் வகையில், முதியோர், தங்கள் வாழ்வின் சில மணி நேரங்களை, சுய விருப்பப் பணியாளர்களாக செலவிட்டுவருவது குறித்து, தன் மகிழ்ச்சியையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

முதிய வயதிலும் மற்றவர்களுக்கு நம்மை அர்ப்பணித்து செயல்படும்போது, நம் தனிமை விரட்டப்படுவதுடன், மனதளவிலும் நாம் உறுதியுடன் இருக்க உதவுகின்றது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மைக் காலங்களில் முதியோர், ஒருமைப்பாட்டுணர்வுடன், சமுதாய வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதைக் காண முடிகிறது என்ற தன் மகிழ்ச்சியை வெளியிட்டார்.

அனுபவங்களையும் உள்ளடக்கிய முதியோரின் கனவுகள் இளையோரின் வாழ்க்கைப் பயணத்தில் முக்கியமானவை எனவும் கூறினார், திருத்தந்தை.

நீதியும், அழகும், ஆதரவும், கிறிஸ்தவமும் நிறைந்த ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப, முதியோருக்கும், இளைய சமுதாயத்திற்கும் இடையே இடம்பெற வேண்டிய உரையாடலின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித குடும்பம் மேற்கொண்டுள்ள பயணத்தின் பலமாக இருக்கும் இளையோரின் திறனை, முதியோரின் கடந்த கால நினைவுகளும், ஞானமும், மேலும் பலப்படுத்துகின்றன என எடுத்துரைத்தார்.

முதுமையின் காலம் என்பது, பிறருக்காகப் பரிந்துரைக்கும், மற்றும், உதவித் தேவைப்படுவோருடன் அருகிருக்கும் காலம், ஏனெனில், முதியோர், மற்றவர்களின் பிரச்சனைகளை எளிதில் புரிந்துகொண்டு தீர்வுக்கு உதவமுடியும் என மேலும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 December 2019, 15:30