அன்னை மரி திரு உருவத்தின் முன் செபிக்கும் திருத்தந்தை அன்னை மரி திரு உருவத்தின் முன் செபிக்கும் திருத்தந்தை 

பாப்பிறை கல்வி கழகங்களுக்கு திருத்தந்தையின் செய்தி

திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்களும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், அன்னை மரியாவை, திருஅவையின் உரையாடல், இறையியல் உருவாக்கம் ஆகிய முயற்சிகளுக்கு வழிகாட்டியாக உணர்த்தி வந்துள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நமது கல்வி முயற்சிகள், பணியை நோக்கிச் செல்லாவிடில் அதில் பயனில்லை என்றும், முழு மனித முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் அறிவு சார்ந்த முயற்சிகளே பயனுள்ளவை என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாப்பிறை கல்வி கழகத்தின் உறுப்பினர்களிடம் கூறினார்.

வத்திக்கானில் செயலாற்றிவரும் ஏழு பாப்பிறைக் கழகங்கள் இணைந்து, டிசம்பர் 4, இப்புதன் மாலை, மேற்கொண்ட 24வது பொது அமர்வை, அகில உலக பாப்பிறை மரியாவின் கல்விக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

1959ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, திருத்தந்தை புனித 23ம் ஜான் அவர்களால் உருவாக்கப்பட்ட பாப்பிறை மரியாவின் கல்விக் கழகம், தன் 60ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம், இப்பொது அமர்வை ஏற்பாடு செய்திருந்தது.

"மரியா, கலாச்சாரங்களுக்கிடையே அமைதிக்கு வழி" என்ற தலைப்பில் இந்த 24வது பொது அமர்வு நடைபெறுவதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டு, எவ்வாறு பல்வேறு திருத்தந்தையர் மரியாவின் மீது தனிப்பற்று கொண்டிருந்தனர் என்பதை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டாம் உலகப்போரின் வேளையில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், மரியாவை சமாதானத்தின் அடையாளமாக மக்களுக்கு முன்வைத்தார் என்பதையும், இரண்டாம் வத்திக்கான் சங்கத்தை முன்னின்று நடத்திய திருத்தந்தையர், 23ம் ஜான் மற்றும் 6ம் பவுல் ஆகிய இருவரும், அன்னை மரியாவை 'மனுக்குலத்தின் ஆசிரியர்' என்று உணர்த்தியதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்களும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், அன்னை மரியாவை, திருஅவையின் உரையாடல், இறையியல் உருவாக்கம் ஆகிய முயற்சிகளுக்கு வழிகாட்டியாக உணர்த்தி வந்துள்ளனர் என்று திருத்தந்தை தன் செய்தியில் எடுத்துரைத்துள்ளார்.

பாப்பிறை கல்விக் கழகம், தன் 24வது பொது அமர்வை நடத்திய வேளையில், திருத்தந்தையின் சார்பில் இக்கூட்டத்தில் பங்கேற்ற திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இக்கல்விக் கழகத்திற்கு திருத்தந்தை அனுப்பியிருந்த செய்தியை வாசித்தளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 December 2019, 14:46