இத்தாலிய இளைஞர் குழு இத்தாலிய இளைஞர் குழு 

இயேசு பாலனை, இடையர்களின் கண்கொண்டு உற்று நோக்குங்கள்

திருத்தந்தை பிரான்சிஸ்: மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு பாலத்தை கட்டிய இறைமகன் இன்று நம்மை நோக்கி, நாமும் பாலம் கட்டுபவர்களாக செயல்பட அழைக்கிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அனைத்தையும் புதியதாக்கும் இறைவனின் அன்பை இவ்வுலகிற்கு கொணர்ந்த இயேசு பாலனை, இடையர்கள் கொண்டிருந்த ஆச்சரியக் கண்களுடன், கிறிஸ்து பிறப்பு விழாவன்று உற்று நோக்குமாறு இத்தாலிய இளையோரிடம் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'கத்தோலிக்க நடவடிக்கை' என்ற அமைப்பின், இத்தாலிய இளைஞர் குழுவை, இத்திங்களன்று, திருப்பீடத்தில் சந்தித்து தன் வாழ்த்துக்களை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு பாலத்தைக் கட்டி, விண்ணையும் மண்ணையும் ஒப்புரவாக்கி, மனித குலமனைத்தையும் ஒன்றிப்பில் மீண்டும் கட்டியெழுப்பிய இறைமகன், இன்று, நாமும் பாலம் கட்டுபவர்களாக செயலாற்றவேண்டும் என, நம்மை நோக்கி கேட்கிறார் என்றார்.

இளைஞர்களாகிய நீங்கள், உறவுப் பாலங்களை கட்டியெழுப்புவதால், சிரமங்களைச் சந்திக்கலாம், ஆனால், இயேசுவோடு இணைந்திருந்தால் எவ்வளவு பெரிய வல்ல செயல்களையும் ஆற்றமுடியும் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கத்தோலிக்க நடவடிக்கை குழுவின் இளையோரே, அன்னைமரியா உங்களின் பயணத்தில் துணை வருவாராக, மற்றும், அன்னை மரியாவும் புனித யோசேப்பும், நாம் எவ்வாறு இயேசுவை ஏற்று ஆராதிக்க வேண்டும் என்பதை நமக்கு கற்றுத்தருவார்களாக எனக் கூறி, தனக்காக செபிக்குமாறு அவர்களிடம் வேண்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 December 2019, 15:34