தேடுதல்

Vatican News
இத்தாலியில் வாழும் காங்கோ ஜனநாயக குடியரசைச் சார்ந்த மக்களுக்கு திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை இத்தாலியில் வாழும் காங்கோ ஜனநாயக குடியரசைச் சார்ந்த மக்களுக்கு திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை  (Vatican Media)

காங்கோ குடியரசு மக்களுக்கு திருத்தந்தை வழங்கிய மறையுரை

உரோம் நகருக்கு புகலிடம் தேடி வந்திருக்கும் காங்கோ குடியரசு மக்களே, கடவுளால் வரவேற்கப்படும் நீங்கள், கடவுளின் இல்லமான திருஅவையில் எப்போதும் ஆறுதலைப் பெறமுடியும் என்பதை உணர்ந்து, பயணம் செய்யுங்கள் - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இவ்வுலகில் மனிதராக வந்த இறைமகன், இறுதி நாளில் மீண்டும் வருவார் எனினும், இன்றும் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் வந்தவண்ணம் உள்ளார் என்று, இஞ்ஞாயிறு திருப்பலியில் மறையுரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகர், மற்றும், இத்தாலியில் வாழும் காங்கோ ஜனநாயக குடியரசைச் சார்ந்த மக்களுக்கென ஓர் ஆன்மீக வழிநடத்தல் அமைப்பு உருவாக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இத்தாலியில் வாழும் அந்நாட்டு மக்களுடன் இணைந்து, புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை.

இத்திருப்பலியில் வழங்கிய மறையுரையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் இல்லத்திலும், இதயத்திலும் நிறைய இடமிருப்பதாகக் கூறும் இயேசு, அங்கு வாழ்வதற்கு நம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறார் என்று எடுத்துரைத்தார்.

வெகு தூரத்திலிருந்து உரோம் நகருக்கு புகலிடம் தேடி வந்திருக்கும் காங்கோ குடியரசு மக்களே, கடவுளால் வரவேற்கப்படும் நீங்கள், கடவுளின் இல்லமான திருஅவையில் எப்போதும் ஆறுதலைப் பெறமுடியும் என்பதை உணர்ந்து, இறை ஒளியில் ஒன்றிணைந்து பயணம் செய்யுங்கள் என்று கூறினார் திருத்தந்தை.

உலகம் சார்ந்த வழிகள் நம்பிக்கை வேர்களை அரித்துவிடுகின்றன என்ற கவலையை தன் மறையுரையில் வெளியிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் ஒளியை தெரிவு செய்யவேண்டிய இடத்தில் நாம், இவ்வுலகின் இருளை தெரிவு செய்கிறோம் என்று எடுத்துரைத்தார்.

பிறரைப்பற்றிய கவலை ஏதுமின்றி, சுயநலப் போக்குடன் வாழ்ந்துவரும் நம்மை நோக்கி, 'விழிப்பாயிருங்கள்' என்ற அழைப்பை இயேசு விடுப்பது குறித்து சிந்திப்போம் என்பதை, தன் மறையுரையில் வலியுறுத்தினார், திருத்தந்தை.

02 December 2019, 15:31