தேடுதல்

Vatican News
 புனித பேதுரு வளாக கிறிஸ்து பிறப்பு காட்சி அமைப்பிற்கும், கிறிஸ்மஸ் மரத்திற்கும் உதவியோருடன் புனித பேதுரு வளாக கிறிஸ்து பிறப்பு காட்சி அமைப்பிற்கும், கிறிஸ்மஸ் மரத்திற்கும் உதவியோருடன்  (Vatican Media)

கிறிஸ்து பிறப்பு காட்சியை அமைத்தோருக்கு திருத்தந்தை நன்றி

புனித பேதுரு வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கிறிஸ்து பிறப்பு காட்சி அமைப்பிற்கும், கிறிஸ்மஸ் மரத்திற்கும் தேவையான ஏற்பாடுகளையும், பொருளுதவிகளையும், செய்தோருக்கு திருத்தந்தை நன்றி தெரிவித்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனித பேதுரு வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கிறிஸ்து பிறப்பு காட்சி அமைப்பிற்கும், அங்கு வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்மஸ் மரத்திற்கும் தேவையான ஏற்பாடுகளையும், பொருளுதவிகளையும், செய்தோரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 5, இவ்வியாழன் மதியம் புனித 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Trento, Vicenza மற்றும் Treviso, பகுதிகளிலிருந்தும், Trento, Padua மற்றும் Vittorio Veneto மறைமாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த அனைத்து திருப்பயணிகளையும் வாழ்த்துவதாகக் கூறிய திருத்தந்தை, இப்பகுதிகளில், சென்ற ஆண்டு நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்களையும் நினைவுகூர்ந்தார்.

வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக 40 கன்றுகள்

இந்த கிறிஸ்து பிறப்பு காட்சியையும், கிறிஸ்மஸ் மரத்தையும் உருவாக்க வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடு செய்யும் வண்ணம் 40க்கும் மேற்பட்ட மரங்கள் அப்பகுதியில் நடப்படுவது குறித்து தான் மிகவும் மகிழ்வதாக திருத்தந்தை இச்சந்திப்பில் கூறினார்.

புனித பேதுரு வளாகத்தில் மட்டுமல்லாமல், புனித 6ம் பவுல் அரங்கத்திலும் உருவாக்கப்பட்டுள்ள கிறிஸ்து பிறப்பு காட்சிகள், Conegliano பகுதியின் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றன என்றும், இக்காட்சிகள், கிறிஸ்மஸ் காலத்தில் வத்திக்கானுக்கு வருகை தரும் அனைத்துலக மக்களையும் கவரும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மகிழ்வைத் தெரிவித்தார்.

வியாபாரத்திலிருந்து திசைதிருப்ப, கிறிஸ்மஸ் குடில்கள்

வயதில் வளர்ந்தோர், குழந்தைகள் அனைவரையும் மகிழ்விக்கும் கிறிஸ்மஸ் குடில்கள், இக்கிறிஸ்மஸ் காலத்தை வெறும் வியாபாரமயமாக்கும் இவ்வுலக போக்குகளிலிருந்து இறைவனை நோக்கி திருப்புகின்றன என்று, திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.

புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கிறிஸ்து பிறப்பு காட்சி, கிறிஸ்மஸ் மரம் ஆகியவற்றை, டிசம்பர் 5, இவ்வியாழன் மாலை, வத்திக்கான் நகர அரசின் தலைவர், கர்தினால் Giuseppe Bertello அவர்களும், செயலரான ஆயர் Fernardo Vérgez Alzaga அவர்களும் திறந்து வைத்து, ஒளியேற்றினர்.

05 December 2019, 14:34