"Solidarnosc" அமைப்பின் உயர்மட்டக் குழுவினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் "Solidarnosc" அமைப்பின் உயர்மட்டக் குழுவினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

போலந்து நாட்டின் தொழில் சங்கத்தைப் பாராட்டிய திருத்தந்தை

"Solidarnosc" அமைப்பைச் சார்ந்தவர்கள், சமுதாயத்தின் பொதுநலனையும், பல்வேறு குழுக்களின் வளர்ச்சியையும் மனதில் கொண்டு செயலாற்றுவதற்கு, தன் நன்றியைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

போலந்து நாட்டில் உருவாக்கப்பட்ட தனித்தியங்கும் தொழில் சங்கமான "Solidarnosc" என்ற அமைப்பு, தன் 40வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதையொட்டி, இச்சங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, டிசம்பர் 4, இப்புதன் காலையில் திருப்பீடத்தில் சந்தித்தது.

இக்குழுவினரைச் சந்தித்து வாழ்த்திய திருத்தந்தை, "Solidarnosc" அமைப்பைச் சார்ந்தவர்கள், சமுதாயத்தின் பொதுநலனையும், பல்வேறு குழுக்களின் வளர்ச்சியையும் மனதில் கொண்டு செயலாற்றுவதற்கு, தன் நன்றியைத் தெரிவித்தார்.

1979ம் ஆண்டு, ஜூன் 2ம் தேதி, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், வார்சா நகரில் நிறைவேற்றிய திருப்பலியில் வழங்கிய மறையுரையில், தூய ஆவியார், போலந்து நாட்டின் முகத்தைப் புதுப்பிக்க இறங்கிவரவேண்டும் என்று வேண்டிக்கொண்டதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் நினைவுகூர்ந்தார்.

மனிதகுலம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் திருஅவையால் பதில் சொல்ல இயலாது என்றாலும், மனித மாண்பை உயர்த்திப்பிடிக்கும் அனைத்து முயற்சிகளிலும், திருஅவை, அரசுகளுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்பதற்கு, "Solidarnosc" அமைப்பு நல்லதோர் எடுத்துக்காட்டு என்று திருத்தந்தை தன் உரையில் கூறினார்.

"ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்" (கலாத்தியர் 6:2) என்ற விருதுவாக்குடன், "Solidarnosc" தொழில் சங்க அமைப்பு, தன் பணிகளைத் தொடர, போலந்து நாட்டின் அரசியான இறைவனின் தாயை வேண்டி, இவ்வமைப்பை தான் ஆசீர்வதிப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 December 2019, 14:37