நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் புதிய தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் புதிய தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே  

நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் புதியத் தலைவர்

பிலிப்பீன்ஸ் நாட்டின் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களை, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நியமித்துள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டின் மணிலா பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களை, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 8, இஞ்ஞாயிறன்று நியமித்துள்ளார்.

மணிலா உயர் மறைமாவட்டத்தின் பேராயராகவும், அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் தலைவராகவும் பணியாற்றி வரும், 62 வயது நிறைந்த கர்தினால் தாக்லே அவர்கள், கத்தோலிக்க விவிலியக் கூட்டமைப்பின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

பிலிப்பீன்ஸ் நாட்டின் மணிலாவில் 1957ம் ஆண்டு பிறந்த கர்தினால் தாக்லே அவர்கள், 1982ம் ஆண்டு, தன் 25வது வயதில் மறைமாவட்ட அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், இறையியலில் முனைவர் பட்டம் பெற்ற தாக்லே அவர்கள், 2001ம் ஆண்டு ஆயராக அருள்பொழிவு பெற்று, 2011ம் ஆண்டு மணிலா பேராயராக பொறுப்பேற்றார்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2012ம் ஆண்டு, பேராயர் தாக்லே அவர்களை கர்தினாலாக உயர்த்தினார்.

இதுவரை, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவராகப் பணியாற்றிவந்த கர்தினால் ஃபெர்னாண்டோ ஃபிலோனி அவர்களை, புனித பூமியில் உள்ள புனித கல்லறைகளின் பாதுகாப்பாளர்கள் அமைப்பின் தலைவராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 December 2019, 16:15