கிறிஸ்மஸ் குடிலைப் பற்றிய திருத்தூது மடலில் கையெழுத்திடும் திருத்தந்தை கிறிஸ்மஸ் குடிலைப் பற்றிய திருத்தூது மடலில் கையெழுத்திடும் திருத்தந்தை 

கிறிஸ்மஸ் குடிலைப் பற்றி, திருத்தந்தையின் திருத்தூது மடல்

டிசம்பர் 1, சிறப்பிக்கப்பட்ட திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்மஸ் குடிலின் பொருளை விளக்கும் திருத்தூது மடல் ஒன்றை, 'வியத்தகு அடையாளம்' என்று தலைப்பில் வெளியிட்டுள்ளார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள், 1223ம் ஆண்டு, இத்தாலியின் கிரேச்சோ (Greccio) நகரில் கிறிஸ்து பிறப்பு குடிலை முதன்முதலாக உருவாக்கிய இடத்தைச் சென்று பார்வையிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடிலின் பொருள் மற்றும் முக்கியத்துவம் குறித்து திருத்தூது மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடவுள் குழந்தையானதை எடுத்துரைக்கும் குடில், இடையர்களைப்போல் நாமும் சீடர்களாகவும், நற்செய்தி அறிவிப்பாளர்களாகவும் மாறவேண்டும் என்ற அழைப்பை விடுப்பதாக உள்ளது என்று இம்மடலில் கூறும் திருத்தந்தை. எளிமையைக் கண்டுகொள்ள குடிலில் வைக்கப்பட்டிருக்கும் வைக்கோல் தொட்டி உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 1, சிறப்பிக்கப்பட்ட திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று, 'வியத்தகு அடையாளம்' என்று தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள இம்மடல், கிறிஸ்மஸ் குடிலை 'வாழும் நற்செய்தி' என்று அழைக்கிறது.

நற்செய்தியில் கூறப்பட்டுள்ள இயேசுவின் பிறப்பை நம் கண்முன் கொணரும் குடில், நம் இதயங்களைத் தொட்டு, நாம் மீட்பு வரலாற்றில் காலடி எடுத்துவைக்க உதவுகிறது என்று இம்மடலில் விவரித்துள்ளார் திருத்தந்தை.

கிறிஸ்மஸ் குடிலில் காணப்படும் அன்னை மரியா, யோசேப்பு, இடையர்கள் ஆகியோரின் பங்களிப்பு, அவர்கள் வழியே நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் ஆகியவை குறித்தும், திருத்தந்தை பிரான்சிஸ்  அவர்கள், இம்மடலில் விளக்கிக் கூறியுள்ளார்.

டிசம்பர் 1, இஞ்ஞாயிறு மாலை, ரியேத்தி (Rieti) மறைமாவட்டத்தின் கிரேச்சோ எனுமிடத்தில், முதல் குடில் உருவாக்கப்பட்ட திருத்தலத்திற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில் இத்திருத்தலத்தின் வளாகத்தில் குழுமியிருந்த நோயாளிகள் மற்றும் முதியோரைச் சந்தித்தபின், முதல் குடிலில் சிறிது நேரம் அமைதியில் செபித்து, பின்னர், அங்குள்ள ஆலயத்தில் இறைவார்த்தை வழிபாட்டை முன்னின்று நடத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2019, 15:23