மூவேளை செப உரை 151219 மூவேளை செப உரை 151219 

நாம் நம் பாவங்களுக்கு மடிய வேண்டும்

குடிலில் கிடத்தப்பட்டிருக்கும் குழந்தையில், ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டோரின் முகம் பிரதிபலிப்பதைக் கண்டுகொள்ளவேண்டும் - மூவேளை செப உரையில் திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடவுளில் நம்பிக்கைக் கொண்டிருந்தால் மட்டும் போதாது, மாறாக, ஒவ்வொரு நாளும் நம் விசுவாசத்தை புனிதப்படுத்துவதற்கான தேவை உள்ளது என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தங்கள் வீடுகளில் அமைக்கப்பட உள்ள குடில்களில் வைப்பதற்குரிய இயேசு பாலன் திருவுருவத்தை தாங்கி, புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த குழந்தைகள் மற்றும் பெரியோருக்கு, தன் ஞாயிறு மூவேளை செப உரையில், இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருவருகைக்காலம் என்பது, கிறிஸ்துவுக்காக காத்திருந்து, அவர் வருகைக்காக நம்மை தயாரிக்கும் காலம் என்றார்.

நம்மீது கொண்ட அன்பினால், மனிதனாகப் பிறந்து, நம்மோடு இணைந்த இறைவனோடு, நாமும் இணைய வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரின் தாழ்ச்சியால் கவரப்பட்டு, ஆன்மீக வழியில் நடைபோடுவோம் எனவும் கேட்டுக்கொண்டார்.

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறாகிய இது மகிழ்ச்சியின் ஞாயிறு என்பதையும் நினைவூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்வாழ்வு, மகிழ்வும், சந்தேகங்களும் நிறைந்ததாக இருப்பதால், மகிழ்வைத் தேடும் நாம், சந்தேகங்கள் குறித்து கவனமுடன் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.

பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது என்ற இயேசுவின் கூற்றில், மனிதரின் முழு விடுதலை முன்வைக்கப்பட்டு, நாம் நம் பாவங்களுக்கு மடிய வேண்டும் என்பது உணர்த்தப்படுவதால், இது மனமாற்றத்திற்குரிய அழைப்பு என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்து பிறப்பு வருகைக்காக தயாரித்துவரும் நாம், குடிலில் கிடத்தப்பட்டிருக்கும் குழந்தையில், ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டோரின் முகம் பிரதிபலிப்பதைக் கண்டுகொள்ள வேண்டும், ஏனெனில், இறைவனின் பிரசன்னத்தை நம்மிடையே முதலில் கண்டுகொள்பவர்கள் அவர்களே, என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை

நம் உள்ளத்திற்குள் ஏற்கனவே நுழைந்து, அதேவேளை மீண்டும் நுழைய வரும் இறைமகனுக்காக நம் உள்ளத்தில் ஓரிடம் தயாரிப்போம் என்ற விண்ணப்பத்துடன் தன் மூவேளை செப உரையை நிறைவுசெய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இன்னும் ஓராண்டு காலத்திற்குள், அதாவது, வரும் செப்டம்பர் மாதம் புடாபெஸ்ட் நகரில் 52வது உலக நற்கருணை மாநாடு இடம்பெறும் என்பதை இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் நினைவூட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது' என்ற திருப்பாடல் வரிகளை தலைப்பாகக் கொண்டு, ஹங்கேரியின் புடாபெஸ்ட்டில் 2020ம் ஆண்டு செப்டம்பர் 13 முதல் 20 வரை இந்த நற்கருணை மாநாடு இடம்பெற உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 December 2019, 12:30