தேடுதல்

Vatican News
கர்தினால்கள் ஆலோசனைக் குழுவுடன் திருத்தந்தை கர்தினால்கள் ஆலோசனைக் குழுவுடன் திருத்தந்தை  (Vatican Media)

கர்தினால்கள் ஆலோசனைக் குழுவின் 32வது சந்திப்பு

திருஅவையில், முடிவுகள் எடுக்கும் பொறுப்பில், பொதுநிலையைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் கூடுதல் பங்கு வகிக்கும் வழிகள் கர்தினால்கள் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க உருவாக்கப்பட்ட கர்தினால்கள் அவை, டிசம்பர் 2, இத்திங்கள் முதல், 4 புதன் முடிய வத்திக்கானில் மேற்கொண்ட 32வது சந்திப்பைக் குறித்த விவரங்களை, வத்திக்கான் செய்தித் தொடர்பகம் இப்பூதன் மாலை வழங்கியது.

கர்தினால்கள் Pietro Parolin, Óscar Rodríguez Maradiaga, Reinhard Marx, Seán Patrick O’Malley, Giuseppe Bertello, மற்றும் Oswald Gracias ஆகிய ஆறு கர்தினால்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இச்சந்திப்பில் பங்கேற்று, கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

வத்திக்கானில் செயலாற்றும் பல்வேறு துறைகளுக்கும், உலகெங்கும் இயங்கிவரும் ஆயர் பேரவைகளுக்கும் இடையே இருக்கவேண்டிய தொடர்புகள் குறித்த வழிமுறைகள் இக்கூட்டத்தின் ஒரு முக்கிய கருத்தாக விவாதிக்கப்பட்டது.

மேலும், திருஅவையில் முடிவுகள் எடுக்கும் பொறுப்பில், பொதுநிலையைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் கூடுதல் பங்கு வகிக்கும் வழிகளும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அமேசானை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெற்ற சிறப்பு ஆயர்கள் மாமன்றம் குறித்த ஓர் அறிக்கையை, கர்தினால் Michael Czerny அவர்கள் சமர்ப்பிக்க, இந்த மாமன்றத்தின் விளைவாக உருவாகிவரும் மாமன்ற ஏட்டைக்குறித்த பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

கர்தினால்களின் ஆலோசனைக் குழுவின் அடுத்தக் கூட்டம், 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

05 December 2019, 15:00