ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
இவ்வாண்டு டிசம்பர் 13ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளாராக அருள்பொழிவு பெற்றதன் 50ம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்படுவதையொட்டி, நவம்பர் 4, கடந்த திங்கள், அவரது உருவங்கள் பதிக்கப்பட்ட இரு தபால் தலைகளை, வத்திக்கான் தபால் துறை வெளியிட்டுள்ளது.
1969ம் ஆண்டு, டிசம்பர் 13ம் தேதி, திருவருகைக் காலத்தின் மகிழும் ஞாயிறன்று, அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்ற இளையவர் ஹோர்கே மாரியோ பெர்கோலியோவின் மகிழ்ச்சி நிறைந்த ஓர் உருவம் முதல் தபால் தலையில் பதிக்கப்பட்டுள்ளது என்று, இந்த உருவத்தை வரைந்த இஸ்பானிய ஓவியர், ரவுல் பெர்ஸோஸா (Raul Berzosa) அவர்கள் கூறினார்.
இந்த உருவத்திற்குப் பின்னணியில், இளையவர் பெர்கோலியோ தன் அழைப்பை உணர்ந்த புனித யோசேப்பு பசிலிக்காவின் உருவம் ஒரு புறமும், அருள்பணி பெர்கோலியோ அவர்கள் மிகுந்த பக்தி கொண்டிருந்த முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னை மரியாவின் உருவம் மறுபுறமும் வரையப்பட்டுள்ளன.
இரண்டாவது தபால் தலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உருவம் முன்னிலையிலும், புனித பேதுரு பசிலிக்கா மற்றும் இறை இரக்கத்தின் கிறிஸ்து ஆகிய உருவங்கள் பின்புலத்திலும் வரையப்பட்டுள்ளன.
1936ம் ஆண்டு, டிசம்பர் 17ம் தேதி பிறந்த ஹோர்கே மாரியோ பெர்கோலியோ, தன் 33வது வயதில் அருள் பணியாளராகவும், 56வது வயதில் ஆயராகவும் அருள் பொழிவு பெற்று, 2013ம் ஆண்டு, தன் 77வது வயதில் திருஅவையின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
83 வயதான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இயேசு சபை துறவியாக 61 ஆண்டுகளையும், ஓர் அருள் பணியாளராக, 50 ஆண்டுகளையும் நிறைவு செய்துள்ளார். (Zenit)