தேடுதல்

Vatican News
இளையோருக்கு காணொளிச் செய்தி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இளையோருக்கு காணொளிச் செய்தி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

வியட்நாம் இளையோருக்கு திருத்தந்தையின் காணொளிச் செய்தி

ஆசிய கலாச்சாரத்தில், உள்ளத்திற்கு மிகவும் நெருக்கமான ஓர் எண்ணமாக விளங்கும் 'இல்லம்' என்ற சொல், மனிதமனம், உறவு, மற்றும் தாய்நாடு என்ற பல எண்ணங்களின் அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பயணத்திற்கு முன்னதாக, வியட்நாம் நாட்டில் தேசிய இளையோர் நாளை சிறப்பிக்கும் இளையோருக்கு, காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

"உமது வீட்டிற்குச் செல்க" (மாற்கு 5:19) என்று இயேசு கூறிய சொற்களை, இளையோர் நாள் கொண்டாட்டங்களின் மையக்கருத்தாகத் தெரிவு செய்துள்ளதை தன் செய்தியில் பாராட்டியத் திருத்தந்தை, 'வீடு அல்லது இல்லம்' என்ற சொல்லை, தன் செய்தியின் மையப்பொருளாக பகிர்ந்துள்ளார்.

ஆசிய கலாச்சாரத்தில், குறிப்பாக, வியட்நாம் கலாச்சாரத்தில் 'இல்லம்' என்ற கருத்து, உள்ளத்திற்கு மிகவும் நெருக்கமான ஓர் எண்ணம் என்று கூறியத் திருத்தந்தை, மனிதமனம், உறவு, மற்றும் தாய்நாடு என்ற பல எண்ணங்களின் அடையாளமாக இச்சொல் பயன்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளார்.

திருமுழுக்குப் பெற்றவர்கள் என்ற நிலையில், கத்தோலிக்க இளையோர், திருஅவை என்ற பெரும் இல்லத்தின் உறுப்பினர்கள் என்பதை, தன் காணொளிச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வியட்நாம் தலத்திருஅவை, பல்வேறு போராட்டங்களையும் துணிவுடன் எதிர்கொண்ட ஓர் இல்லம் என்பதை நினைவுகூர்ந்து, பாராட்டியுள்ளார்.

"வியட்நாமில் வாழும் கத்தோலிக்கர்கள், ஒருவரை ஒருவர் அன்பு செய்பவர்கள், கத்தோலிக்கத் திருமறை அன்பின் மறை" என்று அந்நாட்டில் மறைப்பணியாற்றிய இயேசு சபை துறவி, Alexandre de Rhodes அவர்கள் கூறியதை, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, உன்னதமான இந்த எடுத்துக்காட்டு, தொடர்ந்து அந்நாட்டில் உயிரோட்டம் கொண்டிருக்கவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்.

தொடந்து வரும் மூன்று ஆண்டுகள், இளையோரின் மீது கவனம் செலுத்த, வியட்நாம் ஆயர்கள் தீர்மானித்திருப்பதை, தன் காணொளிச் செய்தியின் இறுதியில் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர் பேரவை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இளையோர் முழு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இறையடியாரான கர்தினால் Van Thuan அவர்கள், நம்பிக்கையின் சாட்சியாக இளையோர் அனைவரையும் வழிநடத்த செபிப்பதாகக் கூறி, இளையோர் நாள் விழாவில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் தன் ஆசீரை வழங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

20 November 2019, 14:25