தேடுதல்

சுற்றுச்சூழல் சிறார் ஆர்வலர்களுடன் திருத்தந்தை சுற்றுச்சூழல் சிறார் ஆர்வலர்களுடன் திருத்தந்தை  

என்னால் முடியும் என்பது, எங்களால் முடியும் என மாற வேண்டும்

எல்லாவற்றையும் கொண்டிருக்க வேண்டும் மற்றும், எதையும் கொடுக்க விரும்பாதவர்களைவிட, நீங்கள் மகிழ்வானவர்கள் – சுற்றுச்சூழல் சிறார் ஆர்வலர்களிடம் திருத்தந்தை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சுற்றுச்சூழல் மற்றும், சமுதாய வளர்ச்சித் திட்டங்களில், நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் தங்களை அர்ப்பணிக்க முன்வந்திருக்கும் பள்ளிச் சிறாரைப் பாராட்டி ஊக்குவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 30, இச்சனிக்கிழமை நண்பகலில், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில், ஏறத்தாழ 3,500 சிறார் மற்றும், இளையோர், தங்களின் சுற்றுச்சூழல் மற்றும், சமுதாய வளர்ச்சித் திட்டங்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் காட்டி ஆசீர் பெற்றனர். இவர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை, எல்லாவற்றையும் கொண்டிருக்க வேண்டும் மற்றும், எதையும் கொடுக்க விரும்பாதவர்களைவிட, நீங்கள் மகிழ்வானவர்கள் என்று கூறினார்.  

இறைவா உமக்கே புகழ் என்ற திருமடலை மையப்படுத்தி, “என்னால் முடியும்” என்ற தலைப்பில், உரோம் நகரில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் கலந்துகொண்ட இச்சிறாரிடம் பேசிய திருத்தந்தை, ஸ்மார்ட் தொலைபேசிகளில் நேரத்தைச் செலவழிப்பதைக் குறைத்து, பொதுநலப்பணியில் ஈடுபாடு காட்டுவதற்கு உங்களை அர்ப்பணித்துள்ளீர்கள் என்று பாராட்டிப் பேசினார்.

நவம்பர் 26, இச்செவ்வாய் முதல், நவம்பர் 30, இச்சனிக்கிழமை வரை, FIDAE  என்ற கல்வித் திட்டங்களைச் செயல்படுத்தும் நிறுவனங்களின் கூட்டமைப்பு அமைப்பு நடத்திய   பன்னாட்டு கூட்டத்தில் கலந்துகொண்ட சிறாரிடம், ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற கூட்டுப்பண்பை, திருத்தந்தை வலியுறுத்திப் பேசினார்.

ஒன்று சேர்ந்து செயலாற்றுகையில், என்னால் முடியும் என்பது, எங்களால் முடியும் என மாறும் என்றும், கொடுப்பதிலே மகிழ்வை எட்ட முடியும் என்றும், திருத்தந்தை கூறினார்.

சிறாரின் இத்திட்டங்களில் பெற்றோரையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, சிறாரின் இந்த சிறந்த திட்டங்களில் உடனிருந்து பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தன் நன்றியையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்தார்.

இறைவா உமக்கே புகழ் என்ற திருமடலை மையப்படுத்தி, “என்னால் முடியும்” என்ற தலைப்பில், உரோம் நகரில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் 43 நாடுகளிலிருந்து சிறாரும், இளையோரும் கலந்துகொண்டனர். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 November 2019, 15:26