மூன்று முக்கிய பேரிடர்களில் பாதிக்கப்பட்டு, வாழ்ந்துகொண்டிருப்பவர்களை திருத்தந்தை சந்தித்தார் மூன்று முக்கிய பேரிடர்களில் பாதிக்கப்பட்டு, வாழ்ந்துகொண்டிருப்பவர்களை திருத்தந்தை சந்தித்தார் 

ஜப்பான் Scholas Occurrentes அமைப்பினர் சந்திப்பு

அணுக்கதிர்வீச்சின் பாதிப்புகள் பற்றிய உண்மையை வயது வந்தவர்கள் அறிவிக்க வேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

பசிபிக் பெருங்கடலில், ஆசியக் கண்டத்தின் கிழக்குக் கரையில், கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று ஜப்பான். ஏறத்தாழ 6,852 தீவுகளைக் கொண்டுள்ள ஜப்பானில், 2017ம் ஆண்டின் நிலவரப்படி, 12 கோடியே 68 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். 1869ம் ஆண்டிலிருந்து ஜப்பானின் தலைநகரமாக விளங்கும் டோக்கியோவில், அந்நாட்டின் 11 விழுக்காட்டு மக்கள் வாழ்கின்றனர். உலகின் மிகப்பெரிய, நகரப் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் டோக்கியோவில், உலகிலுள்ள 500 பன்னாட்டு நிறுவனங்களில் 51 உள்ளன. இத்தகைய புகழ்பெற்ற நகரில், நவம்பர் 25, இத்திங்கள் உள்ளூர் நேரம் காலை 9.15 மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம், இத்திங்கள் காலை 5.45 மணிக்கு தனது திருத்தூதுப் பயண நிகழ்வுகளை, தான் தங்கியிருக்கும், டோக்கியோ நகர் திருப்பீடத் தூதரகத்தில் தொடங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். முதல் நிகழ்வாக, அத்தூதரகத்தில், Scholas Occurrentes அமைப்பின் உலகளாவியத் தலைவர் José Maria del Corral அவர்கள் தலைமையில், ஜப்பான் Scholas Occurrentes மாணவர் குழுவை, 35 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார், திருத்தந்தை. இந்த அமைப்பினரின் சான்று வாழ்வு மற்றும், படைப்பாற்றலுக்கு, திருத்தந்தை நன்றி தெரிவித்தார். ஞானம் என்பது, கருத்தியல்களைக் கொண்டிருப்பது அல்ல, மாறாக, எண்ணங்கள் உதிக்கும் மனம், உணர்வு கொண்ட இதயம், செயலாற்றும் கரம் ஆகிய மூன்று மொழிகளைக் கொண்டது. நீங்கள் வைத்திருக்கும் இந்த ஓவியத்தில், இந்த மூன்று மொழிகளையும் வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள். இந்த மூன்றையும், ஒருசேரப் பயன்படுத்துகையில், ஒருவர் உண்மையிலேயே படைப்பாற்றல் உள்ளவர் எனக் கூற முடியும் என்று கூறியத் திருத்தந்தை, Scholas Occurrentes மாணவர் குழுவினரின் துணிச்சலான பணிகளுக்கு நன்றி தெரிவித்தார். இறுதியில், Sendai நகரில்,  Scholas அமைப்பின் புதிய பணித்தளத்திற்கென, ஒலிவச் செடி ஒன்றையும், பெயர் பலகையையும் ஆசீர்வதித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்த உலகளாவிய அமைப்பு, 190 நாடுகளில் இயங்கி வருகிறது. Scholas Occurrentes மாணவர் குழுவினரைச் சந்தித்தபின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டோக்கியோவில் முக்கியமான கூட்டங்கள் நடைபெறும் Hanzomon Bellesalle மையத்திற்குச் சென்றார். இந்த மையத்தில், ஆண்டுக்கு ஏறத்தாழ 11 ஆயிரம் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவ்விடத்தில், ஜப்பானில் 2011ம் ஆண்டில் இடம்பெற்ற, நிலநடுக்கம், சுனாமி, Fukushima அணுமின் நிலையச் கசிவு ஆகிய மூன்று முக்கிய பேரிடர்களில் பாதிக்கப்பட்டு, வாழ்ந்துகொண்டிருப்பவர்களை, திருத்தந்தை சந்தித்தார். இப்பேரிடர்களில், 15 ஆயிரத்துக்கு அதிகமானோர் இறந்தனர். ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் கடுமையான சேதங்களும் ஏற்பட்டன. இந்நிகழ்வில், முதலில், இந்த மூன்று பேரிடர்களாலும் பாதிக்கப்பட்டவர்களில் மூவர் சாட்சியம் சொன்னார்கள்.

சாட்சியங்கள்

சுனாமியில் தப்பிப்பிழைத்த Toshito Kato என்ற பாலர் பள்ளி ஆசிரியர் பகிர்ந்துகொள்கையில், எனது நகரம் முழுவதும் சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டது. ஆயினும், நான் இழந்ததைவிட பெற்றதே அதிகம் என்று சொல்லி, வாழ்வின் விலைமதிப்பற்றதன்மை குறித்து, சிறாருக்குக் கற்றுக்கொடுப்பதன் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். Fukushima அணுமின் நிலையத்திற்கு அருகிலுள்ள புத்தமத ஆலயத்தில் பணியாற்றும், அம்மதக் குரு Tokuun Tanaka அவர்கள் பேசுகையில், இயற்கைப் பேரிடர்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றிப் பகிர்ந்துகொண்டார். இப்பூமியின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டியது மிகவும் முக்கியம் என்றும், பேரிடர்களைத் தவிர்ப்பதற்கு, நேர்மை, தாழ்ச்சி மற்றும், ஆழமான புரிந்துணர்வுடன் தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என்றும் அவர் பேசினார். மேலும், அணுசக்தி கசிவினால் பாதிக்கப்பட்ட Matsuki Kamoshita என்பவர் பேசுகையில், Fukushima அணுக்கசிவை முன்னிட்டு, அச்சமயத்தில் எட்டு வயது நிரம்பியிருந்த நானும், எனது குடும்பமும் டோக்கியோவிற்கு அனுப்பப்பட்டோம், அணுக்கதிர்வீச்சின் பாதிப்புகள் பற்றிய உண்மையை வயது வந்தவர்கள் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  Fukushima நிலைய அணுக்கசிவால், ஒரு இலட்சத்து அறுபதாயிரம் பேர் கட்டாயமாக புலம்பெயர்ந்தனர். இது நடந்து எட்டு ஆண்டுகள் சென்றும், ஐம்பதாயிரத்திற்கு அதிகமான மக்கள், இன்னும் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பமுடியாத நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திங்கள் காலையில், ஜப்பானில் முப்பெரும் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்கள் சந்திப்பில் ஆற்றிய உரையில், நாம் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்பவர்கள் என்று கூறினார். இச்சந்திப்பை நிறைவு செய்து, டோக்கியோ நகரின் பேரரசர் மாளிகைக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 November 2019, 15:16