தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

உணவை வீணடிக்கும் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொணர...

இவ்வுலகைக் குறித்த போதிய அறிவோடும், முடிவற்ற வாழ்வு குறித்து போதிய அறிவின்றியும் வாழ்கிறது இக்கால சமூகம் - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

உணவை வீணாக்கும் கலாச்சாரத்திற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'எங்கள் அன்றாட உணவை எமக்குத் தாரும் என இறைவனை நோக்கி வேண்டும் நாம், உணவை வீணடிக்கும் கலாச்சாரத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும்’ என விண்ணப்பிப்பதாக திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி அமைந்துள்ளது.

மேலும், இஞ்ஞாயிறன்று வெளியிடப்பட்ட திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி, இஞ்ஞாயிறு திருப்பலி நற்செய்தி வாசகத்தை ஒட்டியதாக இருந்தது.

'இந்நாளின் நற்செய்தி வாசகத்தில் இயேசு, மரணத்திற்கு பின்னரான வாழ்வு பற்றி தெளிவாக, எளிமையாக எடுத்துரைப்பதை செவிமடுக்கும்போது, ஆறுதலும் நம்பிக்கையும் பிறக்கிறது. இவ்வுலகைக் குறித்து போதிய அறிவோடும், முடிவற்ற வாழ்வு குறித்து போதிய அறிவின்றியும் வாழும் இக்காலத்தைச் சேர்ந்த நமக்கு, இயேசுவின் இம்மொழிகள் அதிகமாகத் தேவை' என உரைக்கிறது, திருத்தந்தையின் ஞாயிறு டுவிட்டர் செய்தி.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமை வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில், 'மரணத்தை அழித்து உயிர்த்த உண்மை கடவுளும் உண்மை மனிதருமான இயேசு, அனைத்து மனங்களிலும் உயிர்த்தெழ ஆவல் கொள்கிறார். தீமைகளால் காயமுற்றிருந்தாலும், எவரும் கடவுளிடமிருந்து இவ்வுலகில் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டவர்களாக தீர்ப்பிடப்பட முடியாதவர்கள்’ என்ற சொற்களைப் பதிவுசெய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 November 2019, 15:44