தேடுதல்

Vatican News
ஏழைகளுடன் திருத்தந்தை உணவு உண்கிறார் 171119 ஏழைகளுடன் திருத்தந்தை உணவு உண்கிறார் 171119  (Vatican Media)

விண்ணகத்தில் நுழைய ஏழைகள் நமக்கு உதவுகிறார்கள்

திருத்தந்தை : வாழ்வதற்கு நோக்கத்தைக் கொடுக்கின்ற அன்பெனும் பெரும் செல்வத்தை வெளிப்படுத்தி நிற்கின்றனர் ஏழைகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்-வத்திக்கான் செய்திகள்

வானகத்தில், கடவுளால் மட்டுமல்ல, நம்முடன் சிறந்த முறையில் வாழ்ந்தவர்களாலும் நாம் வரவேற்கப்படுவோம் என்ற கருத்தை மையமாக வைத்து, இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“நாம் வானகத்தில் வரவேற்கப்படும்போது, கடவுள் மட்டும் தனியாக அங்கு இருக்க மாட்டார், மாறாக, கடவுள் நம்மிடம் ஒப்படைத்தவற்றை சிறப்பாக நிர்வகித்து, அதில் நம்மோடு பங்குபெற்றவர்களும் இருப்பார்கள்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

மேலும், நவம்பர் 17, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட மூன்றாவது வறியோர் உலக நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூன்று டுவிட்டர் செய்திகளைப் பதிவு செய்திருந்தார்.

திருத்தந்தை வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி, “இன்றைய நற்செய்தி வாசகம், எதிலும் அவசரப்பட்டு செயலாற்றுவதற்கு எதிர்மருந்தாக உள்ளது, நம் ஒவ்வொருவருக்கும் மனவுறுதியை முன்வைக்கும் இயேசு, மனவுறுதியோடு இருந்து உங்கள் வாழ்வை காத்துக் கொள்ளுங்கள்  என உரைக்கிறார்” என எழுதியுள்ளார்.

இஞ்ஞாயிறன்று வெளியான இரண்டாம் டுவிட்டரில், “விண்ணகத்தில் நுழைய ஏழைகள் நமக்கு உதவுகிறார்கள். இன்றும் அவர்களே திருஅவையின் பெரும்சொத்து. எப்போதுமே பழையதாகிவிடாத, அதேவேளை, விண்ணையும் மண்ணையும் இணைக்கின்ற, வாழ்வுக்குரிய நோக்கத்தைக் கொடுக்கின்ற அன்பெனும் பெரும் செல்வத்தை வெளிப்படுத்தி நிற்கின்றனர், ஏழைகள்” என எழுதியுள்ளார் திருத்தந்தை.

தன் மூன்றாவது டுவிட்டரிலோ, “இறைவனின் இதயத்தை ஆக்கிரமித்திருக்கும் ஏழைகள் நம் இதயத்தையும் ஆக்கிரமித்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

18 November 2019, 16:25