தேடுதல்

கியூபா ஆலயம் கியூபா ஆலயம் 

ஹவானாவின் 500ம் ஆண்டு நிறைவுக்கு காணொளிச் செய்தி

கியூபா நாட்டுத் தலைநகர் ஹவானா, நம்பிக்கை, பிறரன்பு, எதிர்நோக்கு ஆகிய பண்புகளை, தூண்களாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தாங்கள் தேவையில் இருக்கின்றோம் என்பதை ஏற்பவர்கள் மீது கடவுள் இரக்கமுள்ளவராய் இருக்கின்றார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 15, இவ்வள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார்.

சான் கிறிஸ்டோபல் (புனித கிறிஸ்டோபர்)

மேலும், கியூபா நாட்டு சான் கிறிஸ்டோபல் தெ ஹவானா நகரம் உருவாக்கப்பட்டதன் ஐந்தாம் நூற்றாண்டு கொண்டாட்டங்களுக்கு, காணொளிச் செய்தி ஒன்றை இவ்வெள்ளியன்று அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தங்களின் 500 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டாடும் மக்களுடன் தானும் ஒன்றித்திருப்பதாகக் கூறியுள்ள திருத்தந்தை, நம்பிக்கை, பிறரன்பு, எதிர்நோக்கு ஆகிய பண்புகளைத் தூண்களாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்நகரம், தொடர்ந்து அப்பண்புகளைக் காத்து வருகின்றது என்று கூறியுள்ளார்.

இந்நகரத்தின் வேர்களாக உள்ள நம்பிக்கை, இந்நகரின் வளர்ச்சிக்கு உதவி வருகின்றது என்றும், இந்த வேர்களை மறக்காமல், இந்நகரை அமைத்தவர்களின் நம்பிக்கைக்குச் சான்றாக வாழ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை,  இக்கொண்டாட்டத்தின் மையமாகச் சிறப்பிக்கப்படும் திருப்பலி, கிறிஸ்தவர்கள், நற்செய்திக்குச் சான்றாக வாழ உதவுகின்றது என்று கூறியுள்ளார்.

பிறரன்பு, கியூபா நாட்டு மக்களைச் சுட்டிக்காட்டும் மற்றுமொரு பண்பாகும் என்று கூறியுள்ள திருத்தந்தை, இப்பண்பின் வழியாக, நம் ஒவ்வொரு நாள் வாழ்விலும், அன்பையும், கனிவையும் வழங்குமாறு, அன்னை மரியா நமக்கு கற்றுத்தருகிறார் என்று கூறியுள்ளார்.

எதிர்நோக்கு பற்றி இறுதியில் பேசியுள்ள திருத்தந்தை, தன் தோள்களில், தன் சகோதரர், சகோதரிகளைத் தூக்கிச் சுமந்த புனித கிறிஸ்டோபர், உங்களையும் தூக்கிச் சுமக்கிறார் எனவும், நம்பிக்கை, பிறரன்பு, எதிர்நோக்கு ஆகிய தூண்கள், இந்த அருளின் யூபிலி காலத்தில், கியூபா மக்களைத் தாங்கிப் பிடிக்க வேண்டுமென்று ஆண்டவரிடம் மன்றாடுவதாகவும் உறுதி கூறியுள்ளார்.

கியூபா நாட்டுத் தலைநகர் ஹவானாவின் அதிகாரப்பூர்வ பெயர், சான் கிறிஸ்டோபல் தெ ஹவானா ஆகும். இந்நகர், 1519ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 November 2019, 15:22