உரோம் காரித்தாஸ் மையத்தில் திருத்தந்தை உரோம் காரித்தாஸ் மையத்தில் திருத்தந்தை  

அன்புகூர்வதில், பிறருக்கு உதவுவதில் வெறித்தனமான ஆர்வம்

ஒருவர் உதவி கேட்கிறார் என்றால், அவர் வலுவற்றவர் என்று அரத்தமாகும், நாம் எல்லாருமே வலுவற்றவர்கள் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“கடவுள் தம் மக்களை அன்புகூர்கிறார் என்ற நினைவை அவர்களின் இதயங்களில் உயிரோட்டம் பெறச் செய்வதற்காக, திருஅவை வாழ்கிறது. “கடவுள் உங்களை மறக்கவில்லை, அவர் உங்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறார்” என்பதை, எல்லாருக்கும், கடவுளைவிட்டு வெகுதொலைவில் இருப்பவர்களுக்கும்கூட சொல்வதற்காக, திருஅவை இருக்கின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்   இச்சனிக்கிழமையன்று கூறினார்.

நவம்பர் 30, இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், திருஅவை, இவ்வுலகில் இருப்பதன் நோக்கத்தை இவ்வாறு பதிவுசெய்துள்ளார்.

உரோம் காரித்தாஸ் மையத்தில் திருத்தந்தை

மேலும், நவம்பர் 29, இவ்வெள்ளி மாலை 4 மணியளவில், தன் 40ம் ஆண்டு நிறைவைச் சிறப்பித்த உரோம் மறைமாவட்ட காரித்தாஸ் மையத்திற்குச் சென்று, அந்த மையத்தில் நடைபெறும் பல்வேறு பிறரன்புப் பணிகளைப் பார்வையிட்டு, ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள், தன்னார்வலர்கள், வழிநடத்துவோர் மற்றும் பணியாளர்களுடன் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பிறரை அன்புகூர்வதிலும், பிறருக்கு உதவுவதிலும், வலுவிழந்தவர்களுடன், வலுவற்றதன்மையைப் பகிர்ந்துகொள்வதிலும், வெறித்தனமான ஆர்வம்கொண்டிருங்கள் என்று கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒர்னெல்லா என்ற தன்னார்வலரும், சாலையில் மீடகப்பட்ட அலெஸ்ஸியோ என்பவரும் பகிர்ந்துகொண்ட சாட்சியங்களால் மனம் நெகிழ்ந்து, வலுவற்றநிலை பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். உதவிக்காக அழுது கதவைத் தட்டுகின்றவர்கள், தங்கள் சகோதரர், சகோதரிகளின் காயங்களைத் தொடும்வரை வளைந்து கொடுக்கத் தீர்மானிப்பவர்கள் வலுவற்றவர்கள் என்றும் திருத்தந்தை கூறினார். ஒருவர் உதவி கேட்கிறார் என்றால், அவர் வலுவற்றவர் என்று அரத்தமாகும், நாம் எல்லாருமே வலுவற்றவர்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.

“பிறரன்பின் நகரம் (Citadel of Charity)” எனப்படும், உரோம் மறைமாவட்டத்தின் இக்காரித்தாஸ் மையத்தில் இயங்கும் பல் மருத்துவ மையம், புனித ஜசிந்தா இல்லம், ஒருமைப்பாட்டு பல்பொருள் அங்காடி, காப்பி, தேனீர் கடை உட்பட, பல மையங்களைப் பார்வையிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ். காரித்தாஸ் மைய இயக்குனர் அருள்பணி பெனோனி அம்பாருஸ் அவர்களுடன், 200க்கும் அதிகமான பணியாளர்கள் மற்றும், தன்னார்வலர்களைச் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

காரித்தாஸ் மையம்

முதலில், இம்மையத்தின் முக்கிய இடமான புனித ஜசிந்தா ஆலயம் சென்ற திருத்தந்தை, அதற்குப்பின் பல் மருத்துவ மையத்திற்குச் சென்றார். அங்கு, சிறார் உட்பட 350க்கும் அதிகமானோர்க்குப் பல் சிகிச்சை அளிக்கும், நாற்பதுக்கும் அதிகமான தன்னார்வலர்களைச் சந்தித்தார் திருத்தந்தை. கடந்த ஆண்டில் மட்டும், இரண்டாயிரத்துக்கு மேலான பல் மருத்துவ சிகிச்சைகள் இங்கு வழங்கப்பட்டுள்ளன.

புனித ஜசிந்தா ஆலயம், உரோம் மாநகரம், காரித்தாஸ் மையத்திற்கு வழங்கிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 19ம் நூற்றாண்டு கட்டடமாகும். இதனை, காரித்தாஸ் மையம், மிகுந்த கவனமுடன் பழுதுபார்த்து, பயன்படுத்துகிறது.

காரித்தாஸ் மையத்தில் செயல்படும் இலவச பல்பொருள் அங்காடிக்கும் திருத்தந்தை சென்றார். 2008ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த அங்காடி, இத்தாலியில் இவ்வாறு இயங்கும் முதல் பல்பொருள் அங்காடியாகும். ஒவ்வோர் ஆண்டும், 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இது உதவி வருகிறது. 2018ம் ஆண்டில், 7,70,000 யூரோக்கள் பெறுமான, 490 டன்களுக்கும் அதிகமான உணவுப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், திருத்தந்தை சென்ற வீடற்றவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள புனித ஜசிந்தா இல்லத்தில், 50 வயதுக்கும் மேற்பட்ட, வறியநிலையிலுள்ள 82 பேர் பராமரிக்கப்படுகின்றனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மையத்திற்கு ஐந்தாவது முறையாக இவ்வெள்ளியன்று சென்றார். இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு நிகழ்வாக, 2015ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி, உரோம் காரித்தாஸ் மையத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தின் கதவுகளை, புனிதக் கதவுகளாக திறந்து வைத்து, திருத்தந்தை, திருப்பலி நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 November 2019, 15:35